புவியின் சுற்றுவட்டப்பாதையில் இரண்டு விண்கலங்களை இணைக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளது இந்தியா. இதனால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தச் சாதனையை நிகழ்த்தும் நான்காவது நாடு என்ற பெருமையைப்பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றால் மிகையல்ல.
விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி என்பதையும் தாண்டி, பொருளாதாரக் காரணங்களாலும் இச்சாதனை முக்கியமானதாகிறது.
விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பத்தை, ‘பொருத்துதல்’ அல்லது Docking என்பர். டாக்கிங் என்றால் என்னவென்று பார்த்துவிடுவோம். எளிமையாகச் சொல்லவேண்டுமானால், இரயிலின் இரண்டு பெட்டிகளை இணைக்கும் செயல்முறையைச் சொல்லலாம். இந்த இணைப்பு, பெட்டிகளுக்கிடையே பயணிகள் சென்றுவர வசதியளிக்கிறதல்லவா? அதேபோல, இரண்டு விண்கலங்களின் இணைப்பு அவற்றுக்கிடையே பண்டப்பரிமாற்றங்களைச் சாத்தியமாக்குகிறது. டாக்கிங் செய்யப்பட்ட இரு விண்கலங்கள் ஒரே கூறாகச் செயல்படவியலும்.
‘இது என்ன பெரிய அதிசயம்? இதுக்கா இவ்வளவு விளம்பரம்? எவ்வளவு ஹாலிவுட் படத்துல இதப்பாத்துருப்போம். இன்டெர்ஸ்டெல்லார், மார்ஷியன், அப்பல்லோ 13, ஸ்டார் வார்ஸ்…’ என்று உங்கள் மனம் அடுக்குவது தெரிகிறது. அறிவியல் ஒரு புள்ளிவைத்தால், அதைச்சுற்றித் தன் கற்பனைக்கோடுகளைப் பின்னிப் படரவிட்டுப் பல வண்ணக்கோலங்கள் போட்டுவிடும் மாயக்காரர்கள் திரைத்துறையினர். பலநேரங்களில் திரைக்கும் நிதர்சனத்துக்குமான இடைவெளி கணக்கிடமுடியாதது.
Add Comment