பொதுவாக முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு மரியாதை இருக்காது, பெண்ணுரிமை, சமத்துவமெல்லாம் பேச முடியாது என்றொரு கருத்து உண்டு. துபாய் முஸ்லிம் நாடுதான். இங்குள்ள பெண்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஓர் எளிய வழி இருக்கிறது.
பெண்கள் மியூசியம்.
என்றால், பெண்களை மியூசியத்தில் வைத்துவிட்டார்களோ என்று நினைக்க வேண்டாம். இந்த விஷயமே வேறு.
துபாயில் எண்ணெய் கண்டறியப்படுவதற்கு முன்னும், ஆங்கிலேயர்களின் காலனித்துவ காலத்தின் போதும் தேரா என்ற பகுதி ஒரு குடியிருப்புப் பிராந்தியமாகத்தான் இருந்தது. பழைய துபாய் என்று சொல்லுவார்கள். மண்ணால் ஆன வீடுகள் இருந்தன. இப்பொழுது அங்கு பல சூக் (கடைகள்) இருக்கின்றன. முக்கியமாகத் தங்கம் வாங்க மக்கள் செல்லும் இடமான கோல்ட் சூக், பிராந்தியத்தில் மிகவும் பிரபலம்.
இந்தப் பகுதியில் ஓர் இரண்டடி சந்துக்குள் இருக்கிறது இந்தப் பெண்கள் அருங்காட்சியகம்.
துபாயின் முதல் பெண் மனநல மருத்துவரான ஓபைத் குபைஷ் இதை உருவாக்கி இருக்கிறார். இப்பொழுது அவருக்கு அறுபத்து ஏழு வயது. அவர் வளர்ந்த வீட்டையே ஊருக்குப் பொதுவாக்கி, அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார். அவர் முயற்சியைப் போற்றி, 2012 ஆம் ஆண்டு துபாய் அரசர் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் இந்த அருங்காட்சியகத்தைத் தானே நேரில் வந்து திறந்து வைத்தார்.
பொதுவாக அருங்காட்சியகங்களில் புராதனமான பொருள்கள் இருக்கும். அவை அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை எடுத்துச் சொல்லும்.
ஆனால் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களும் புகைப்படங்களும் 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகே சேகரிக்கப்பட்டவை. அன்று முதல் இன்று வரை சமூகத்தில் அரேபியப் பெண்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தில் மொத்தம் மூன்று தளங்கள் இருக்கின்றன. கீழ் தளத்தில் மெமரி ஆப் தி ப்ளேஸ் என்று எழுதப்பட்ட பெரிய சுவரில் சாதனை புரிந்த சில முக்கியமான அரேபியப் பெண்களின் புகைப்படங்களும் அவர்கள் பெயர்களும் இருந்தன. அரேபிய வாசனைத் திரவியக் கடை ஒன்று இருந்தது. அவர்கள் அணியும் ஆடை வகைகள், ஆபரணங்கள் போன்றவையும் அங்கே இருந்தன. ஒரு தேநீர் விடுதியும் இருந்தது. ஆனால் அருங்காட்சியகத்துக்கு வருவோருக்கு உள்ளே நுழையும் முன்பே கருங்காபியும் பேரீச்சையும் கொடுத்துவிடுகிறார்கள் என்பதால் இந்த விடுதியில் தேநீர் அருந்திப் பார்க்கத் தோன்றுவதில்லை.
Add Comment