இனிப்பில்லாத விருந்தில், சம்பிரதாயத்துக்காக இலையின் ஓரத்தில் வைக்கப்படுகிற சர்க்கரைபோல, பல தேர்தல்களாகத் தேர்தல் அறிக்கை வெளியீடு என்பது ஏதோ பெயருக்கு நடக்கும் சடங்காகவே இருந்தது. நீண்ட நெடுங்காலங்காலமாய்த் தொடரும் சில பல மார்க்கண்டேயப் பிரச்னைகளை வைத்துக்கொண்டு உருவாகி, அலங்காரமாக வழவழத் தாளில் புத்தகமாகப் போடப்பட்டு, தலைவர்கள் குழுவாக அதனுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு கலைந்து போவதுதான் பன்னெடுங்காலமாக வழக்கில் இருந்தது. மக்களும் அதை ஒரு பொருட்டாகக் கொண்டதும் இல்லை.
ஆனால் 2006-ல் தி.மு.க. திரும்பவும் ஆட்சிக்கு வந்தேதீர வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், யாரும் அதுவரையில் கற்பனையில் கூட நினைத்திராத இலவசத் திட்டங்களைத் தேர்தல் அறிக்கையில் வாரி வழங்கியது. இலவசக் கலர் டிவி, இலவச 2 ஏக்கர் நிலம், மாணவர்களுக்கு சைக்கிள், விவசாயக் கடன் ரத்து, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் (தேர்தல் வெற்றிக்குப்பின் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என மாற்றப்பட்டது) என்று ஏராளமான இலவசத் திட்டங்கள் இந்த தேர்தலில் ஒருசேர அறிவிக்கப்பட்டு, வாக்காளர்களை திணறடித்தன.
அன்று தொடங்கி, இந்தியா முழுவதுமே கவர்ச்சிகரமான திட்டங்கள், அறிவிப்புகள் கொண்ட தேர்தல் அறிக்கைகளை பாரதத் திருநாடும், இலவச நினைவகற்றாத அதன் புதல்வர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஒவ்வொரு மாநிலமும் அதை அச்சுப் பிசகாத தேர்தல் ஃபார்முலாவாக அப்படியே தொடர்ந்தது. தேர்தல் தேதி அறிவித்தவுடனேயே ஒரு குழுவை அமைத்து எத்தை அறிவித்தால் பித்தம் தெளிந்து மக்கள் தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள் என்று தலையைப் பிய்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தன.
இதோ… இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளும் வந்திருக்கின்றன. இதிலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் இன்னொருவருக்குத் தாங்கள் சளைத்தவர்களில்லை என்று அறிவிப்புகளை மாறி மாறித் தெளித்திருக்கிறார்கள். உள்ளதில் எது உருப்படி? பார்க்கலாம்.
இருபெரும் கட்சிகளின் அல்வாத் துண்டுகளான தேர்தல் அறிக்கைகளை இலையில் வைத்து பறிமாறியதற்கு நன்றி