எலான் மஸ்க் அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர். அவருடைய ஆசை உலகை நவீனத் தொழில் நுட்பங்களால் செதுக்கி எவ்வளவு துரிதப்படுத்தப் படுத்தமுடியுமோ அவ்வளவு துரிதப்படுத்த வேண்டும். பிழையே இல்லாத இயந்திரங்களால் உலகை இயக்க வேண்டும். நவீன உலகச் சிற்பியாக வேண்டும். ஆனால் அந்த நவீன உலகில் மனிதர்கள் இருக்க முடியாது என்பதை மட்டும் அவர் அறியத்தவறியதுதான் பரிதாபம். இயந்திரங்கள் பழுதானால் தூக்கி எறிவதைப் போவதைப் போல மனிதர்களைத் தூக்கி எறியக் கற்றிருப்பது இளமைக் காலத்திலேயே வந்திருக்கிறது. இயந்திரங்களுக்கு வலியோ வேதனையோ இல்லை. மனிதர்களுக்கு உண்டு. எலானைப் போல மற்றவர்களுக்கு உணர்ச்சிகள் மரத்துப் போய்விடவில்லை என்பதைக்கூட அவர் அறியாத அளவு அவர் உணர்ச்சிகள் மரத்துப் போய்விட்டன.
ஆரம்பக் காலம்: உணர்ச்சிகள் இல்லா நிலைக்கு எலான் வந்த காரணம் அறிய அவர் இளமைக் காலம் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். எலான், தென்னாப்பிரிக்காவில் உள்ள ப்ரெடோரியா என்ற ஊரில் 1971இல் பிறந்தார். கனடா குடிமகளான மேயே மஸ்க் என்ற அன்னைக்கும் எர்ரல் மஸ்க் என்ற தென்னாப்பிரிக்க தந்தைக்கும் பிறந்தவர். செல்வச் செழிப்பு மிக்க வீடு. அன்னை மாடல், தந்தை பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். தந்தையும் தாயும் விவாகரத்து செய்தபின் அதீத செல்வம் உடைய தந்தையுடன் இருப்பதைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த முடிவுக்காகப் பின்னால் வருந்துகிறார். அன்னையின் பாசத்திற்காக அல்ல, கனடா நாட்டுக் குடியுரிமைக்காகவும் அன்னையின் அங்கீகாரத்திற்காகவும்.
எலான் படித்த பள்ளியில் புல்லியிங் இருந்தது. ஒரு சிறுவனின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அந்தச் சிறுவனை எலான் முட்டாள் என அழைக்க, எலானுக்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையே சண்டை நடக்க எலான் கான்க்ரீட் படிகளில் தூக்கி எறியப்படுகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்கொலை செய்துகொண்ட சிறுவனின் தந்தையை முட்டாள் என அழைத்தற்காக நான் எலானை எப்படிக் கடிந்து கொள்ள முடியும் என எர்ரல் சொன்னதாக குறிப்பு இருக்கிறது. இதில் இருந்தே எலானின் எம்பதி அற்ற மனப்பாங்கைப் புரிந்து கொள்ளலாம். இதுதான் தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கிறது. பிறகு சின்ன சின்ன காரணங்களுக்காகத் தன் நிறுவன ஊழியர்களை நண்பர்களை நீக்குவதில் தொடங்கி மனைவியரை நீக்குவது வரை போனது. இன்று அரசாங்க ஊழியர்களை நடுத்தெருவிற்குக் கொண்டுவருவதுவரை வளர்ந்திருக்கிறது. பல நாடுகளில் பசியிலும் நோயிலும் மக்கள் வாட உதவிக்கான நிதி நிறுத்துவதற்கும் பின்னாலுள்ள மனநிலையைப் புரிந்து கொள்ள முன்னோடியாக இருக்கிறது.
Add Comment