10. விளம்பர வார்த்தைகள்
1999-இல், பீட்டா வெர்ஷனிலிருந்து வெளிவந்தபோதே கூகுள் நிறுவனம் அதன் புகழ்ப் படிகளில் ஏறத் தொடங்கிவிட்டது. கல்லூரிப் பையன்களின் ப்ராஜக்ட் என்ற கோஷங்கள் காணாமற் போயின. முதலீடு செய்வதற்கு பல பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. மிகத் தெளிவான திட்டத் தயாரிப்புகளுடனும், ஏற்கனவே ஆகிவந்த தேடுதல் புகழாலும், சரசரவென முன்னேற்றப் படிகளில் ஏறத்தொடங்கியது.
ஆனால் இதை வைத்துக்கொண்டு எப்படி லாபம் சம்பாதிக்கப் போகிறீர்கள் என்ற ஆதாரக் கேள்விக்கு விடை சொல்லாமலே இருந்தது சில முதலீட்டாளர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது. கூகுளின் முகப்பை போர்ட்டலாக மாற்ற மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆகவே அதில் விளம்பரம் செய்ய வழியே இல்லாமல் போனது.
அதைத்தாண்டி அன்று பிரபலமாக இருந்த பேனர் விளம்பரங்களைப் புகுத்தலாம் என்று சில முதலீட்டாளர்கள் ஆலோசனை சொன்னார்கள். அதாவது, இப்போதிருக்கும் முகப்புப் பக்கம் அப்படியே இருக்கட்டும். பக்கம் திறந்து சில நொடிகளுக்கு மேலேயோ, கீழேயோ, பக்கத்திலோ ஓரிரண்டு விளம்பரப் பேனர்கள் அதுபாட்டுக்கு வந்துவிட்டுப் போகட்டுமே என்றார்கள்.
Add Comment