12. மெயிலும் மேப்பும்
இன்று இணையத்தில் புழங்கும் அனைவருமே குறைந்தபட்சம் ஒரு ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் முகவரியாவது வைத்திருக்கிறோம். ஆனால் ஜிமெயில் என்கிற மின்னஞ்சல் சேவையைத் தொடங்கப் போகிறோம் என்கிற கூகுளின் அறிவிப்பு வந்தபோது, உலகம் அதனை நம்பவில்லை, வெகு சாதாரணமாகக் கடந்துபோனது. இரண்டு காரணங்கள். முதலாவது, இந்த அறிவிப்பு வந்த நாள் ஏப்ரல் 1, 2007. பொதுவாகவே கார்ப்பரேட்டுகளும், பெரிய நிறுவனங்களும் ஏப்ரல் ஒன்றாம் தேதி இதுபோன்று வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பெரிய ஆச்சர்யம் வழங்குவதாக அறிவித்துவிட்டுப் பிறகு, “என்னப்பா முட்டாள்கள் தினம் நினைவில்லையா?” என்று வெறுங்கையோடு கடந்துபோவதை உலகம் கண்டிருந்தது. இரண்டாவது இந்த அறிவிப்பு கொடுத்திருந்த நம்பமுடியாத ஒரு சலுகை. மின்னஞ்சல் பதிவு செய்யும் ஒவ்வொருவருக்கும் 1 ஜிபி இலவசமாகத் தருகிறோம் என்றிருந்தது.
அந்தக்காலத்தில் ஜிபி என்பதெல்லாம் உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருந்த கைக்கெட்டாத கனி போன்றது. அன்றைய நாளில் இலவசமாக இணையத்தில் மின்னஞ்சல் வசதிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த ஹாட்மெயில் (Hotmail), யாஹூ மெயில் (yahoo) போன்ற தளங்களே, போனால் போகிறதென்று அள்ளியும் கிள்ளியும் 2 மெகா பைட்டிலிருந்து , 5 மெகா பைட்டுகள் வரைக்கும்தான் கொடுத்துக் கொண்டிருந்தன.
வெறும் எழுத்துகளால் கோக்கப்பட்ட லிகிதம் என்றால் சரி, அனுப்பிக்கொள். படங்கள் இணைத்து அனுப்பினால் அது போய்ச்சேரும் என்று யாரும் உத்தரவாதம் தரவியலாத திருநாள்கள் அவை. அதுவும் போக அதிகம் மெயில் உபயோகிப்பவர் என்றால் வாரம் ஒருமுறை அதுவரை கற்றது, பெற்றது அனைத்தையும் தொடர்ந்து பிரதி எடுத்து வரவேண்டும். இல்லையென்றால் அழித்துத் தூரப்போடவேண்டும். ஆன்லைனில் இடம் வாங்குவது என்பது போயஸ் தோட்டத்தில் நிலம் வாங்குவதைப்போல மிகவும் வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கே சாத்தியமாயிருந்த தொழில்நுட்பக் கற்காலம் அது.
Add Comment