25. ஆட்டோ ராஜா
மற்ற முன்னணித்துறைகள் போலவே வாகனங்கள் உருவாக்கம், பயன்பாடு மற்றும் மேம்பாடு முதலியவற்றில் கூகுளும், ஆல்ஃபபெட்டும் தொடர்ந்து செயலாற்றி வருகின்றன. கூகுள் ஆய்வகங்களில் மருத்துவத்திற்கு அடுத்ததாக தானியக்கி வாகனங்கள் ஆராய்ச்சி பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. வாகனங்களை நுட்பங்கள் கொண்டு மேலும் மேலும் மெருகேற்றுவது பற்றிய தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேமோ (Waymo)
கூகுள் தானியக்கி மகிழுந்து நிறுவனமாக இருந்தது (Google self driving car project). இப்போது வேமோ (Waymo) என்று பெயர் சூட்டப்பட்டு ஆல்ஃபபெட்டின் நேரடிக்கண்காணிப்பில் இயங்கும் தனி நிறுவனமாகியிருக்கிறது. தன்னாட்சி வாகனத் தொழில் நுட்ப (Autonomous vehicle Technology) ஆராய்ச்சி மற்றும் விநியோகத்தில் மிக முக்கிய இடத்தை இப்போது வேமோ பெற்றிருக்கிறது. தொடர்ந்து அதனை மேம்படுத்தி, செயற்கை நுண்ணறிவு கொண்டு நவீனப்படுத்தும் ஆய்வுகள் நடைபெறுகின்றன.
ஆண்ட்ராய்ட் ஆட்டோ (Android Auto)
ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தில் இயங்கும் கைப்பேசிகளை பிரதியெடுத்தது போல, வாகனங்களின் தகவல் மற்றும் நுட்பத் திரையை (infotainment screen) கூகுள் உருவாக்கியிருக்கிறது. ஒரு திறன்பேசி வழங்கும் அத்தனை வசதிகளையும் வாகனத்தில் பொருத்தப்படும் இந்த அகலத்திரையின் வழி வழங்குகிறது. வரைபடங்கள் (maps), குரல்வழி உதவியாளர் (Voice Assistant) ஆகியவற்றோடு, திறன்பேசி இணைத்துப் பேசுதல், இசை, வீடியோ என கைப்பேசி வழங்கும் பிற சேவைகளையும் இந்த அகலத்திரையின் வழி வழங்கக் கூகுள் நுட்பம் உதவுகிறது.
Add Comment