கடந்த வாரம் ஒரு பீகார் பெண்ணுக்குக் கூகுளில் 60 லட்சம் சம்பளத்துடன் வேலை என்ற தலைப்புச் செய்தியுடன் சமூக வலைத்தளங்களின் ரீல்களும், மீம்களும் பறந்தன. செய்தி பற்றிக்கொண்டது அது பீகார் பெண் என்பதாலா? சராசரி இந்திய வருமானத்துக்கும் மிக அதிகமான அறுபது லட்சம் என்ற எண்ணாலா? கூகுள் நிறுவனத்தில் வேலை என்பதனால் அந்தச் செய்தி முக்கியத்துவம் பெற்றதா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும். கூகுள் வேலை என்பது அத்தனை அதிகச் சம்பாத்தியம் தருவதுதானா? கூகுளில் வேலை கிடைப்பது எத்தனை சிரமமானது? கூகுளில் வேலை செய்தால் வேலையையும் வாழ்க்கையையும் சமன் செய்து கொள்ளச் சிறந்த வாய்ப்புகளை வழங்குவது உண்மைதானா?
கூகுள் வேலை என்பது ஒரு கனவு வேலை என்று நிறுவப்பட்டது இப்போதல்ல. அந்த நிறுவனம் தொடங்கிய நாள் முதலாகவே இது செயல்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆரம்ப நாள்களில் கூகுள் தன் நிறுவனத்திற்கு மிகச்சிறந்த நிரலாளர்களையும், உலகின் தலைசிறந்த மூளைகளையும் தேடத் தொடங்கியது. ஆனால் அதற்குக் கொடுக்கவேண்டிய விலை மிகப் பெரியது என்பதை அறிந்தே இருந்தது.
அப்பேர்ப்பட்ட ஜித்தர்கள், சர்வ நிச்சயமாகப் புதியதாக இரண்டு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட கத்துக்குட்டி நிறுவனத்திற்கு வந்து விடுவார்களா என்ன? ஆகவே அப்போதிலிருந்து கூகுளின் வேலைக் கலாசாரத்தின் உச்சம் தீர்மானிக்கப்பட்டது. பணிச்சூழலில் எப்போதும் அது அலுவலகமாக இல்லாமல் பணியாளர்கள் வீடுகளின் இன்னொரு பகுதியெனவே கருதி உருவாக்கப்பட்டது. அவர்களின் தனித்திறன்களுக்கும், சிந்தனைகளுக்கும் பூரணச் சுதந்திரம் வழங்கப்பட்டது. புதிய ஐடியாக்களை உருவாக்குவதற்கும், செயல்படுத்திப் பார்ப்பதற்கும் உரிய சலுகையும், ஊக்கமும் வழங்கப்பட்டது.
Add Comment