நகரம் முழுவதும் தென்னை மரங்களும் வயல்வெளிகளும் ஆறுகளும் குளங்களும் எனப் பசுமை நிறத்தால் சூழப்பட்ட ஒரு மாவட்டம் கன்னியாகுமரி. ஆனால் இரண்டு நாட்கள் இந்த மாவட்டத்தின் சாலைகள் காவியால் போர்த்தப்பட்டிருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் காவி வேட்டி அணிந்து காவித்துண்டைப் போர்த்திய ஆண்களும், காவிப் புடவைகளும் சுடிதாரும் அணிந்த பெண்களும் ஊரை நிரப்பியிருப்பார்கள். இவர்கள் அனைவரும் ஓரிடத்தில் நில்லாமல் ஓட்டமும் நடையுமாக ஓர் ஊரை விட்டு மற்றோர் ஊரை நோக்கிச் சென்று கொண்டிருப்பார்கள். இது சிவராத்திரியன்றும் அதற்கு அடுத்த நாளும் ஆண்டாண்டு காலமாக நடைபெறும் ஒரு வைபவம். இதைத் தான் ‘சிவாலய ஓட்டம்’ என்று சொல்கிறார்கள் இப்பகுதி மக்கள். ஒரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் இவர்கள் கூவிக் கொண்டே செல்லும் மந்திரம் ‘கோவிந்தா கோவிந்தா’ ‘கோபாலா கோபாலா’ என்பது தான்.
சிவன் ஆலய ஓட்டத்திற்கு எதற்கு நாராயணன் மந்திர உச்சாடனம் என்றால் ‘ஹரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதான் வாயில மண்ணு’ என்றுதான் பதில் வரும். மாசி மாதம் ஏகாதசி அன்று மாலையணிந்து விரதம் மேற்கொள்வர். புகை, மது, புலால் அனைத்திற்கும் தடை. விரதம் ஏற்ற நாளில் இருந்தே ஒரு பழக்கத்திற்காக நீண்ட தூரம் நடக்கவும் ஆரம்பிப்பார்கள். இளநீர், தேங்காய், துளசித் தண்ணீர் இவையே ஆகாரம். ஏனெனில் இவர்கள் ஓடும் ஓட்டம் அல்லது நடக்கும் நடை சுமார் நூறு கிலோமீட்டருக்கும் மேலே இருக்கும். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை துவங்கும் இந்த ஓட்டம் அல்லது நடைப்பயணம் அந்தப் பகுதியில் உள்ள பன்னிரண்டு சிவாலயங்களுக்கும் சென்று இரண்டாம் நாள் அதிகாலை முடியும்.
Add Comment