நாம் எந்தப் போட்டித் தேர்விற்குத் தயாராகப் போகிறோம் என்கிற தெளிவு முதலில் வேண்டும். மத்திய அரசின் பணிகளுக்குத்தான் செல்லப்போகிறோம் எனில் அந்த வழியில் பயணிக்கலாம்- விரைவில் நல்ல பலனை தரும். மாநில அரசுப் பணி எனில் நம் கனவு உயர் பதவியாக இருந்தாலும் குரூப்-4 -ல் ஆரம்பித்து எல்லாத் தேர்வும் எழுதிப் பார்க்க வேண்டும். போனால் உயர் பதவிக்குத்தான் போவேன் என்று வாய்ப்புகளையும், ஆண்டுகளையும் விரயம் செய்யக் கூடாது. அதற்கான பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே கிடைக்கும் வேலையில் குரூப்-2 அல்லது குரூப்-4-ல் அமர்ந்துவிடலாம். உள்ளே சென்றால் அதில் கிடைக்கும் பதவி உயர்வின் மூலம்கூட நாம் நினைத்த பதவியை அடைந்துவிட முடியும்.
அதற்காகக் கனவை மறந்து கிடைத்த வேலையில் சொகுசாக அமர்ந்து காற்றுவாங்கக் கூடாது. வேலையில் அமர்ந்துவிட்டாலும் தொடர்ந்து படிக்க வேண்டும். ஏற்கனவே படித்து வேலைவாங்கிய அனுபவம் இருப்பதால் படிப்பு பிரச்சினையாக இருக்காது. வாங்கும் சம்பளம் ஒரு விதமான சொகுசைக் கொடுத்துவிடும். தொடர் முயற்சியில் ஒரு சோம்பேறித்தனம் வந்து கனவைக் கைவிடச் சொல்லும். கனவு தன்னால் கைகழுவி போனால் பிரச்சினை இல்லை. அது உள்ளே இருக்குமானால் அதன் உணர்வுகளை மதித்துத் தொடர்ந்து படிக்க வேண்டும்.
Add Comment