நாம் பலமுறை மெட்ராஸ் பேப்பரில் குறிப்பிட்டதைப் போல காஸாவைத் தாண்டியும் விரிகிறது போர். ஹூதி இயக்கத்தின் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் எனப் பலமுறை எச்சரித்தன மேற்குலக நாடுகள். காலையில் ஃபிரஷ் காபி போலப் பொழுது விடிந்தால் ஃபிரஷ் எச்சரிக்கை ஒன்றை தினமும் அமெரிக்கா தரப்பில் இருந்து அனுப்பினார்கள்.
சம்பாரில் பல்லி இருக்கிறதென்றால் அசராமல் ரசத்தை ஊத்து, எலி இருக்கிறதா என்று பார்க்கலாம் என்பதுபோல ஹூதி அமைப்பு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கவே யேமனில் தாக்குதலைத் தொடங்கிவிட்டது அமெரிக்கா. முதல் சுற்றோடு நிறுத்தாமல் ஃபாலோ அப் தாக்குதலும் நடந்தது. ‘தக்க பதிலடி தருவோம்’ என்று ஹூதி அமைப்பும் தெரிவித்தது. யேமன் தொலைக்காட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேல், அமெரிக்காவை எதிர்த்தும் பாலஸ்தீனத்தை ஆதரித்தும் கோஷம் எழுப்பும் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.
ஹூதி இயக்கம் பற்றிக் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்வது இங்கே அவசியமாகிறது. வளமான சவுதி அரேபியாவை ஒட்டி இருந்தாலும் அரபு நாடுகளிலேயே ஏழை நாடு யேமன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வடக்கு யேமன், தெற்கு யேமன் எனப் பிரிந்திருந்த காலத்தில் வடக்கு யேமனை ஆட்சி செய்தவர்கள் ஹூதி வம்சத்தினர். ஸியா முஸ்லிம்களில் ஒரு உட்பிரிவான ஜைதிகள். ஈரான், ஈராக், லெபனானில் இருக்கும் ஸியா முஸ்லிம்களில் இருந்து வேறுபட்டவர்கள். அறமற்ற ஆட்சிக்கு எதிராகப் போராடுவதைத் தங்கள் கடமையாகக் கருதுபவர்கள்.
யேமனின் மொத்த மக்கள் தொகையில் கால்பாகத்துக்கு மேல் இவர்கள்தான். சாட் பகுதியின் மலை மக்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து இருபதாம் நூற்றாண்டின் பாதிக்குமேல் இவர்கள்தான் சாட் பகுதியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்.
தெற்கு யேமன் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் இந்தியா ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் நேரடி பிரிட்டிஷ் ஆளுகைக்கு வந்தது. அவர்கள் போன பிறகு சோவியத் உடன் இருந்த நட்பும் மதச்சார்பற்ற கொள்கையும் வடக்கு யேமனுடன் உரசலுக்குக் காரணமாக இருந்தன. தெற்கைப் போல வடக்கில் மூன்று மடங்கு அதிக மக்கள் தொகை. வடக்கு யேமன் அப்போதெல்லாம் சவுதியுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. அலி அப்துல்லா சாலேஹ் ஆட்சியில் வடக்கும் தெற்கும் இணைந்தன. ஆனால் சவுதியுடன் பிணக்கு உண்டாகிவிட்டது.
Add Comment