பள்ளி நாட்களில் எனக்குள் இருந்த ஒரு முக்கியமான கேள்வி ‘நாம் எதற்காக வரலாற்றைப் படிக்க வேண்டும்? என்பதுதான். அதிலும் வரலாறு என்பது ஏதோவொரு சத்திரியனைப் பற்றிப் பேசுகிறது அல்லது ஒரு சதிகாரனைப் பற்றிப் பேசுகிறது. சாமானியர்களைப் பற்றியா பேசுகிறது? இல்லையே…. சாமானியர்கள் பற்றிப் பேசாத வரலாற்றை எதற்காக ஒரு சாமானியனான நான் படிக்க வேண்டும்?
யார், எந்த வருடம், எத்தனை மரம் நட்டார் என்பதெல்லாம் நம் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமா என்ன? நமக்கு முக்கியம் நம் வீட்டுத் தோட்டத்தில் என்னென்ன மரங்கள் இருக்கின்றன? அவற்றில் அன்றாடச் சமையலுக்கு உதவும் மரங்கள் எத்தனை..? அதிலும் இன்றே சாம்பாரில் மிதக்கத் தகுந்த பதத்தில் இருப்பது மாங்காயா அல்லது முருங்கைக்காயா..? இதுபோன்ற வினாக்கள்தாமே நமக்கு முக்கியம்..? மரத்தில் ஏறி நல்ல பதமான மாங்காயாகப் பார்த்துப் பறித்துவந்து அம்மாவிடம் கொடுத்தால் மத்தியானம் வழித்து வழித்துச் சாப்பிடலாம். அதைவிட்டுவிட்டு என்றோ ரோட்டில் வைத்த மரங்களை எண்ணிக்கொண்டு இருப்பதில் எனக்கென்ன பயன்?
ஏதோ ஒருவழியாக பத்தாம் வகுப்பிற்குப் பிறகு நான் உண்டு என் மாங்காய் மிதக்கும் சாம்பார் உண்டு என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்தேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு அதில் வரலாற்றை அள்ளிப் போடுவதற்காக தூரத்துச் சொந்தக்கார தம்பியொருத்தன் அபுதாபி வந்து சேர்ந்திருக்கிறான். அவன் முதன்முதலாக எங்கள் வீட்டிற்கு வந்தது ஒரு கோடைக்கால உச்சி வெயில் வேளையில். ‘பாவம், வெயில் என்றும் பார்க்காமல் வீடு தேடி வரப்போகிறானே’ என்று பரிதாபப்பட்டு அவனுக்காக மசாலா மோர் தயாரித்து வைத்திருந்தேன்.
Add Comment