♠ ரா.கி.ரங்கராஜன்
‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு ஸ்டவ்கள் எரிந்து கொண்டிருந்த சூடான மேஜைகளை நோக்கி நகர்ந்தார்கள். நானும்தான். என் நண்பர் செல்வராமன், பாலாம்பிகா ஹாலில் தன் மகளின் நடன அரங்கேற்றம் இருப்பதாக அழைத்ததால் வந்திருந்தேன். பஃபே விருந்தில் கடைப்பிடிக்க வேண்டிய முதல் விதி: முன்னோர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே செய்ய வேண்டியது. அதன்படி பார்க்காத மாதிரி பார்த்து வைத்துக் கொண்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டேன்.
முதல் பாத்திரத்தில் மஞ்சள் நிறத்தில் ரசமலாய் மிதந்து கொண்டிருந்தது. ‘ஈசனோடாயினும் ஆசை அறுமின்’ என்ற பெரியவர்கள் சொல்லியிருந்த போதிலும் எந்தச் சர்க்கரை வியாதிக்காரனுக்கும் இனிப்பு ஆசை மட்டும் விடுவதில்லை. வசதியான கரண்டியால் லாகவமாக எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டேன். அடுத்து பொங்கல் (ரவா உப்புமாவாகவும் இருக்கலாம்) அதில் முக்கால் கரண்டி. பிறகு அழகிய, சிவப்பான இளம் வடைகள்- வடை சைஸில் பெரிதாகவே இருந்தது. அடுத்த பாத்திரம் இட்லி. அதன் பிறகு பளபளவென்ற ஜொலிப்புடன் மடித்து வைக்கப்பட்டிருந்த தோசை- அதில் ஒன்றையும் பக்கத்திலேயே தொட்டுக் கொள்ள வைத்திருந்த உருளைக்கிழங்கு மசாலாவில் அரைக் கரண்டியும் போட்டுக் கொண்டேன்.
Add Comment