தொலைவிலிருக்கும் உறவினருடனோ அல்லது நண்பருடனோ தொடர்பு கொள்வதற்கென்று ஆரம்பக் காலங்களில் ஒரு வழியும் இருக்கவில்லை. தபால் சேவை அறிமுகமானது. அதன் பின்னர் கடிதங்கள் எழுதுவதன் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியதாக இருந்தது. இதற்குத் தூரத்தையும் காலத்தையும் பொறுத்துச் சில நாட்களில் இருந்து சில மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
தொலைபேசி எனும் தொழில்நுட்பம் இந்தக் காத்திருத்தலுக்கு முடிவு கட்டியது. எமக்கு வேண்டியவரின் குரலை அவர் பேசும்போது கேட்கக் கூடியதாக இருந்தது. இது தூரத்திலுள்ளோருடன் தொடர்பு கொள்வதில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அடுத்து இன்றையக் காலகட்டத்தில் நம்மால் எமக்கு வேண்டியவருடன் வீடியோ அழைப்புகள் மூலம் நேரடியாகப் பார்த்துப் பேசக் கூடியதாக இருக்கிறது. திறன்பேசிகளின் பரவலான பயன்பாடும் இண்டெர்நெட் இணைப்புகளின் வளர்ச்சியும் காணொளி உரையாடலைப் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டது.
ஒருவரை நாம் நேரே சந்திப்பதற்கும் வீடியோ அழைப்பில் பேசுவதற்கும் இடையில் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. வீடியோ அழைப்பில் மறு பக்கத்தில் இருப்பவரைத் தொட முடியாது. கட்டி அணைக்க முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறது. வருங்காலத்தில் தூரத்தில் உள்ளவரோடு தொட்டுப் பேசுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். அதற்கான தொழில்நுட்பத்தின் முதல்படியினை ஹாங்காங் சிட்டி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எடுத்துள்ளார்கள்.
Add Comment