இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் தாங்கள் சுற்றுலா செல்லும் நாடுகளைச் சுற்றிக் காண்பிப்பது போல இஸ்ரேலைச் சுற்றிக் காட்டும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது ஹிஸ்புல்லா. வைரல் ஆனாலும் லைக்ஸ் இல்லை. ஏனெனில் இவர்கள் வெளியிட்ட ட்ரோன் விடீயோக்களில் இஸ்ரேல் ராணுவத் தலைமையிடங்கள், குடியிருப்புகள் எல்லாம் இருந்தன. ட்ரோன் அனுப்பிய எங்களுக்கு ஏவுகணையும் அனுப்பத் தெரியும் என்பது அவர்கள் சொல்லியிருக்கும் செய்தி.
காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் போரில் இறந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை நாற்பதாயிரத்தை நெருங்குகிறது. எல்லாக் கண்களும் ராஃபாவை நோக்கி இருக்கிறது (All Eyes On Rafah) என்று உலகம் அணி திரண்டு முழங்கியது. பல மாதங்களாக நடக்கும் போரைக் கண்டும் காணாமலும் இருந்த இந்திய பாலிவுட் பிரபலங்கள் கூட ஹாஷ்டாக் எதிர்ப்பில் கலந்து கொண்டனர். தீவிரத் தாக்குதலைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார். யூதர் குடியேற்றங்களை மீண்டும் காஸாவில் ஏற்படுத்துவது யதார்த்தமான தீர்வில்லை என்றும் சொல்லியிருக்கிறார். அதோடு நிறுத்தவில்லை, இனிமேல் லெபனான் பக்கம் எங்கள் கவனத்தைச் செலுத்தப் போகிறோம் என்றும் சொல்லி இருக்கிறார் நெதன்யாகு.
அடுத்த இலக்கு கிடைத்துவிட்டது என்று நெதன்யாகு உடனே போரைத் தொடங்கிவிட முடியாது. ஹமாஸ் இயக்கமும் ஹிஸ்புல்லாவும் முற்றிலும் வேறான அமைப்புகள். நாள்தோறும் 3000 ஏவுகணைகளை அனுப்பக் கூடிய அளவுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுத பலம் பெற்றவர்கள். இஸ்ரேலின் இரும்புத்திரை ஓரளவுக்குத்தான் தாங்கும். சேர்ந்தாற்போல நான்கு நாள் தாக்குதல் நடத்தினால் கூட பெரும் உயிர்ச்சேதம் உண்டாகும். அதிலும் ட்ரோன் வீடியோக்கள் சொல்லும் செய்தி ராணுவக் கேந்திரங்களும் குடியிருப்புகளும் குறி வைத்துக் தாக்கும் அளவுக்கு வல்லமை எங்களிடம் இருக்கிறது என்பதைத்தான்.
Add Comment