“அத்த, ஏன் அம்மா அப்புடி சொன்னாங்க?”
புயல் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மழையும் கனமாகத் தான் பெய்கிறது. இந்த அரசாங்கம் விடுமுறை விட்டால்தான் என்ன?அல்லது பள்ளிக்கூடம்தான் இந்தப் போட்டிகளைத் தள்ளி வைத்தால்தான் என்ன?. ஆற்றாமை தாளவில்லை மீராவுக்கு. மகளின் கேள்வி அவள் யோசனையைத் துண்டித்தது.
எந்த அத்தை சொன்ன எந்த விஷயத்தை இவள் கேட்கிறாள் என்ற குழப்பத்துடன் நிகழ்காலத்துக்கு வந்தாள். சிந்தனை எங்கோ இருந்தாலும் அதுவரை கண்ணுக்கு மட்டும் தெரிந்து கொண்டிருந்த காட்சி, அப்போதுதான் கருத்தில் பதிந்தது. அந்தப் பேருந்து நிறுத்தத்தின் கூரை தன்னை மழையில் இருந்து பாதுகாக்கக்கூடிய அதிகபட்ச எல்லையில் நின்றிருந்தாள் கவி. கைகளை வெளியில் நீட்டி, தலைகீழாக கீபோர்ட் வாசித்தபடி மழைத்துளிகளை பூமியில் விழவிடாமல் தடுத்துத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தாள்.
அதுவரை பகுத்தறிவு கொண்ட வெறும் மனுஷியாய் இருந்த மீராவை, அந்தக் காட்சி தாய் என்னும் நிலைக்குத் திருப்பியது. பதறித் துடித்து மகளை உள்ளே இழுத்தாள்.
Add Comment