கணக்கு வராத தன் உறவுக்காரப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியபோது அது பின்னாளில், 190 நாடுகளில் 56 மொழிகளில் கோடிக்கணக்கான மாணவர்கள் பயிலும் ஓர் இணையக் கல்வித் தளமாக மாறும் என்பதை சல்மான்கான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டார். இல்லை…. இவர் பாலிவுட்டின் மான் வேட்டைக்காரர் சல்மான்கான் அல்ல.
அமெரிக்காவின் பிரபலமான ‘கான் அகாடெமி’யின் நிறுவனர் சல்கான் என்கிற சல்மான் அமின் கான். பிறந்தது 1976-ஆம் ஆண்டு. வளர்ந்தது, படித்தது எல்லாம் அமெரிக்காவில்தான் என்றாலும், அவரது தந்தை வங்கதேசத்தைச் சேர்ந்தவர். தாய்க்குச் சொந்த ஊர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். கானின் தாத்தா பதினாறாம் நூற்றாண்டின் பஷ்டூன் தலைவர் ரஹ்மத் கானின் வம்சாவழியினர்.
பள்ளிக் காலங்களில் கணிதப் படிப்பை விருப்பப் பாடமாகப் படித்த கானுக்குப் படங்கள் வரைவதிலும் அலாதி விருப்பம் இருந்தது. கல்லூரியில் மின் பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றதோடு, அசராமல் கணிதப் படிப்பிலும் பட்டம் வாங்கியிருக்கிறார். அதுவும் போதாமல், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மைப் படிப்பையும் முடித்திருக்கிறார்.
Add Comment