சாஃப்ட்வேர் குட்டிச்சாத்தான்
ஊர் சுற்றுவது என்றால் ஜெயபாலுக்குக் கொஞ்சமும் பிடிக்காது. எங்கெங்கோ பயணங்கள் போய் இன்ஸ்டாவிலும் ஃபேஸ்புக்கிலும் ரீல்கள் போடுபவர்களைப் பார்க்கும்போது அவருக்கு ஆச்சரியமாக இருக்கும்- எரிச்சலாகவும்.
தவிர்க்கவே இயலாது என்றால் மட்டுமே ஜெயபால் பயணம் செய்வார். வீட்டைவிடச் சந்தோஷம் தருமிடம் வேறொன்று கிடையாது என்பது அவரது நம்பிக்கை. இதைப் பற்றி ஜெயபால் இப்போதெல்லாம் யாரிடமும் பேசுவதுகூட இல்லை. மகிழ்ச்சி வீட்டிற்கு வெளியே என்று முடிவெடுத்துவிட்ட ஒரு கூட்டத்திடம் பேசிப் பலனில்லை என்பதால் இந்த முடிவு.
அன்று காலையிலிருந்து அவருக்கு நான்கைந்து ஃபோன் கால்கள். அத்தனையும் பள்ளியில் உடன் படித்த தோழர்கள். பள்ளிப்படிப்பு முடிந்து நாற்பதாண்டுகளாகிறது. மதுரையில் ஒரு ரீயூனியன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் படித்த அதே பள்ளியில். அவர் கட்டாயம் வரவேண்டுமென அடுத்தடுத்த அழைப்புகள்.
ஹைதராபாத்திலிருந்து மதுரை நீண்ட பயணம்தான். அதுவும் ஜெயபாலின் அகராதியில் இது மிகநீண்ட பயணம். இதற்கும்கூட அவர் போயிருக்கமாட்டார்தான். ஆனாலும் நண்பர்கள் திரும்பத் திரும்ப அழைத்ததால் ஜெயபாலுக்கும் போய் வரலாமெனத் தோன்றியது.
Add Comment