இணைய வழி கேளிக்கைகளுக்கு நாம் தருவது இணையற்ற விலை. அதன் இன்றைய உச்சபட்ச உயரம் ஓடிடி தளங்களுக்குச் செலுத்தும் பணம். இது உலகம் மொத்தத்தையும் எவ்வளவு பாதித்துள்ளதோ, அதே அளவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்நிலைச் சூழலையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? இந்த அச்சம் ஒவ்வொரு இந்தியா வம்சாவழியினரையும் அச்சுறுத்துகிறது.
பள்ளிக்குத் தன் காரைத் தானே ஓட்டிச் செல்கிறாள் அந்த மாணவி. சாலையைக் கடக்க உதவும் தொழிலாளி மீது இடித்து விட்டாள். பயந்தும் விட்டாள். தன் வீட்டிற்குத் தொலைபேசினாள். பெற்றோர்களுக்கு அங்கே உள்ள சட்ட திட்டம் எதுவும் தெரியாது. ஆனால் மகளைக் காப்பாற்ற வேண்டும். பெண்ணை உடனே வீட்டிற்கு வரச் சொன்னார்கள். தாமே கொண்டு போய் பள்ளியில் விட்டு விட்டார்கள். தந்தை மகளின் காரை எடுத்துக் கழுவி சாலையில் வேறு ஓர் இடத்தில் நிறுத்தி விட்டு வந்து விடுகிறார். மாணவியும் எதுவும் நடக்காதது போல வகுப்பில் இருந்துள்ளார். ஒரு வாரம் ஆயிற்று. காவலர்கள் குற்றத்தைக் கண்டு பிடித்து விட்டனர். மாணவி, பெற்றோர் அனைவரையும் கைது செய்து விட்டனர். விபத்து நடந்த இடத்தை விட்டு நீங்கியது. உடனே ஆம்புலன்சை அழைக்காதது. காவலருக்கு தெரிவிக்காதது. நடந்ததை மறைக்க நினைத்தது. தடயங்களை அழித்தது எனப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஒரு விபத்து நடந்து விட்டது. அதைக் குற்றமாகக் கருதி மேலும் மேலும் அதை மறைக்கக் குற்றங்கள் செய்யத் தூண்டியது எது? சில ஓடிடி தொடர்களில் விரியும் கற்பனையான காட்சிகள், சம்பவங்கள்தான். ஏனெனில் இந்த ரகப் பொழுது போக்கு வருவதற்கு முன்னால் இப்படிப்பட்ட குற்றங்கள் இருந்ததில்லை..
Add Comment