மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த முறை நானூற்றுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில் தன் பிரசாரத்தைத் தொடங்கியிருந்தார் மோடி. ஒவ்வொரு கட்டமாகத் தேர்தல் முடிய முடிய அந்த நம்பிக்கைக் கோட்டையின் மீது விரிசல் விழத் தொடங்கியது. முதல் கட்ட தேர்தலுக்குப் பின்னர் மோடி பேசிய பேச்சுக்களே அதற்கு சாட்சி.
மோடி ஆட்சியின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள்கூட தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தனிப் பெருங்கட்சியாக பா.ஜ.க. வெல்லும் என்கின்றனர். ஆனால் மோடிக்கு அந்த எண்ணிக்கையிலும் சந்தேகம் வரத் தொடங்கிவிட்டது.
பத்தாண்டுக் காலம் தாம் என்ன செய்தோம் என்று சொல்லி வாக்கு கேட்கும் தகுதியை முற்றிலுமாக பா.ஜ.க. இழந்து விட்டது. சிறுபான்மையினருக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் அவர் பேசும் வன்மம் மிகுந்த பேச்சுகளும் நடவடிக்கைகளும் சகிக்க முடியாதவையாக மாறிவிட்டன.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தொடங்கிய மோடி தலைமையிலான ஆட்சி பா.ஜ.க.வின் மதிப்பையும் இழக்கும் நிலைக்குச் சென்றிருக்கிறது. செய்த சாதனைகள் எனச் சொல்ல எதுவும் இல்லாதபோது எதிர்க்கட்சிகள் நடைமுறைப் படுத்திய திட்டங்களைக் குறை சொல்ல ஆரம்பித்திருக்கிறார் மோடி.
Add Comment