ஜெயகாந்தனின் ‘ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன்’ கதையின் ஹென்றி அல்லது ‘பாரீசுக்குப் போ’வின் சாரங்கன், ஏன் அய்ன் ராண்டின் ஹாவர்ட் ரோர்க், டாமினிக் போன்று நிஜவாழ்வில் ஒரு சிலரையாவது பார்த்துவிட முடியும். அவர்கள் எல்லாம் என்னுடனேயே எந்த விதத்திலாவது இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அந்த மாதிரியான கதாபாத்திரங்களை எழுத்து வடிவில் கொண்டுவருவதில்தான் எழுத்தாளர்களின் வெற்றி இருக்கிறது. அந்த மாதிரியான பக்குவமான எழுத்தைக் கொண்டுவரத்தான் நான் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
ஆழ்ந்த உறக்கத்தில் என்னை எழுப்பி உவம உருபுகள் எத்தனை என்று கேட்டால் கூட போல புரைய ஒப்ப உறழ மான கடுப்ப இயைய ஏய்ப்ப எனத்தொடங்கிச் சொல்லி எண்ணிப்பார்த்து பன்னிரண்டு என்று சொல்லுமளவுக்குத் தமிழ் இலக்கணம் தெரியும். ஆனால் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாகத் தமிழ் பேசாத மாநிலங்கள், பிறகு நாடுகள் எனது வசிப்பிடங்களாகின. அந்தச் சூழலில் பணிசெய்து தமிழ்ச் சொற்கள் என் அகராதியிலிருந்து என்னை அறியாமலேயே மெல்ல மெல்ல விடைபெற்றுப் போய்விட்டன.
Add Comment