சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான மார்கழி கர்நாடக இசைவிழா இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. நூற்றாண்டுத் தொடர்ச்சி கொண்ட இத்திருவிழாவை ஆண்டுதோறும் கலைஞர்களும், ரசிகர்களும் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். இந்து மதத்தில் மார்கழி மாதம் இசைக்கும், பக்திக்கும் உகந்த மாதமாக ஆண்டாள் மற்றும் மாணிக்கவாசகர் வழி நிறுவப்பட்டிருக்கிறது. அதன் நீட்சியாகவே மார்கழி இசைவிழாவின் தோற்றமும், தொடர்ச்சியும் இருக்கிறது.
18ஆம் நூற்றாண்டில் இசைவிழாக்கள் சென்னையை எட்டியிருக்கவில்லை. அப்போதெல்லாம் சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த தஞ்சை மாவட்டமே இக்குளிர்கால இசை விழாக்களைத் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறது. திருவையாறில் தியாகராஜ ஆராதன தை மாதம் பஞ்சமியில் நடப்பதை முன்னிட்டு அதனை ஒட்டி மார்கழியிலிருந்தே இசைவிழாவைத் தொடங்கி நடத்தி வந்திருக்கிறார்கள்.
1927ஆம் ஆண்டு டிசம்பரில், சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. எட்டு நாள்கள் நடைபெற்ற அந்நிகழ்வில் பொழுதுபோக்கிற்காக, கர்நாடக இசைக்கச்சேரிகளையும், பரதநாட்டிய அரங்கேற்றங்களையும் நடத்தியிருக்கிறார்கள். இதற்குப் பெருவாரியான ஆதரவு கிடைத்திருக்கிறது. சென்னையில் இசை ரசிகர்களே இல்லை என்ற நம்பிக்கையை அது உடைத்தது. அதற்கு அடுத்த வருடமே சென்னை மியூசிக் அகாடமி தொடங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து வருடந்தோறும் இசைவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
Add Comment