நாளிதழ்கள், வார இதழ்களில் சிறுவர்களுக்கென வரும் பகுதிகளில் நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம். வழிதவறிய ஆட்டுக்குட்டியை வீட்டிற்குக்கொண்டு சேர்க்கவும் என்றோ, முயல் கேரட்டை அடைவதற்கு வழிகாட்டுங்கள் என்றோ தலைப்பிட்டு ஓவியம் ஒன்றிருக்கும். நுழைவுப்பகுதி ஓரிடத்திலும், வெளியேறும் பகுதி வேறிடத்திலும் அமைந்திருக்கும். அதில் சதுரமாகவோ, வட்ட வடிவமாகவோ வளைந்தும் நெளிந்தும் செல்லும் சிக்கலான வழித்தடம் இருக்கும். அதனைப்பார்த்தவுடன் கைக்குக் கிடைக்கும் பேனாவையோ பென்சிலையோ எடுத்து, கொஞ்சம் நிதானித்து, கவனத்துடன் ஆராய்ந்து உள்நுழைந்து வெளியேறும் சரியான வழியை வரைவதற்கு கைகள் பரபரக்கும்.
நம்மில் சிலருக்கு வேறொரு அனுபவம் இருக்கலாம். சிறுவயதில் பார்த்ததுதான். வட்டவடிவமான கைக்கு அடக்கமான விளையாட்டுச்சாமான். அதனுள்ளே சிறிய பாதரசக்குண்டுகள் அடைக்கப்பட்டிருக்கும். பிளாஸ்டிக்கிலான தடுப்பு சுவர்களுக்குள் அவற்றினை நுழைந்து, லாவகமாக அந்தக்குண்டுகளை மையத்திற்குக்கொண்டுபோய் சேர்த்து விளையாடியிருப்போம். மேலே சொல்லப்பட்ட ஓவிய உதாரணமும் விளையாட்டுச்சாமான் விளக்கமும் நம் கண்முன் நிறுத்தும் கற்பனையான புதிர் அமைப்பினை மனத்திரையில் சற்று பெரிதுபடுத்திக்கொள்ளுங்கள். நிஜத்தில் அவை பன்னெடுங்காலமாக மண்ணிலும், கற்களிலும், தரைப் பகுதிகளிலும், கல்வெட்டுக்களிலும் உலகமெங்கிலும் காணப்படுகின்றன. அவை புதிரம் என்றும் புதிர்நிலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
ஆங்கிலத்தில் அவற்றை labyrinths, mazes என்கிறார்கள். இன்றுநாம் அன்றாடம் பயன்படுத்தும் QR code அமைப்புகூட ஒருவகையில் புதிர்நிலைகளின் மாறுப்பட்ட வடிவமே. யோசித்துப்பார்த்தால், தினந்தோறும் வாசல்தெளித்து போடப்படும் கோலங்கள்கூட புதிர்நிலைகளின் எளியவடிவம் என்று கூறலாம். உள்நுழைந்தப்பின் வேறெந்த வழியிலும் வெளியேற முடியாதபடி, ஒருவழிப்பாதையாக சென்று குறிப்பிட்ட மையப்பகுதியை அடையும் புதிர் அமைப்புக்களை அறிவுக்கூர்மையினை மேம்படுத்தும் விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளலாம். மனம் ஒருநிலைப்படுத்துவதற்கு அதனை பயிற்சியாகவும் பயன்படுத்தலாம்.
Add Comment