பன்னிரண்டு வயதான பாலஸ்தீனச் சிறுவன் சுலைமான் தன்னுடைய மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தான். தலைபோகும் அவசரம் ஒன்றும் இல்லை. நிதானமாகத்தான் மிதிவண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாகக் கார் மோதி விபத்தைச் சந்திக்க நேர்ந்தது. தலையையும் உடலையும் இணைக்கும் பின் கழுத்துப் பகுதியில் உள்ள முதுகெலும்பு மோசமாகச் சேதமடைந்தது. உடலுடன் தலை ஒட்டிக் கொண்டிருந்தாலும் உள்ளே கிட்டத்தட்ட தலை வேறு முண்டம் வேறு என்னும் நிலைதான். ஹடஸா மெடிக்கல் சென்டர் எய்ன் கரீம் மருத்துவதுமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து சேர்ந்தான். அங்கு அவனுக்கு அறுவைச் சிகிச்சை நடந்து தற்போது நலமாக இருக்கிறான் என்று செய்தி வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம். இது பல வகையில் அரிதினும் அரிதான நிகழ்வு.
இதுபோன்ற விபத்துகளில் மருத்துவமனை வரை ஒருவர் உயிருடன் வந்து சேர்வதே அபூர்வம். 55 சதவிகிதம் பேர் சம்பவ இடத்திலேயோ, வழியிலேயோ இறந்து விடுவார்கள். எண்ணிக்கை அடிப்படையில் இது மிகச் சிறியது. ஃபிலடெல்பியா மருத்துவமனையின் தரவுகளின்படி இருபது வருடங்களில் முதுகெலும்பு மருத்துவம் பார்த்த 2006 பேரில் வெறும் 16 பேர் மட்டுமே இப்படி அபாயகரமாக பாதிக்கப்பட்டவர்கள். இதில் சிறார் எண்ணிக்கை இன்னும் குறைவு. குழந்தைகளின் தலை உடலைவிடச் சற்றே பெரியது என்பதால் அவர்கள் பெரும்பாலும் பிழைத்திருப்பதில்லை.
Add Comment