2024, நவம்பர் 15ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏடி அன் டி அரங்கில் ஏறக்குறைய எழுபதாயிரம் பார்வையாளர் அமர்ந்திருந்தனர். வெளியே கோடிக்கணக்கில் குத்துச்சண்டை ரசிகர்களும் விளையாட்டுப் போட்டி ஆர்வலர்களும் நெட்ஃப்ளிக்சின் லைவ் ஸ்ட்ரீமிங்கில் இணைந்திருந்தனர். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நெட்ஃப்ளிக்ஸ் இணைப்பில் பிரச்சனை உண்டானது. பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துக் களமாடி வைரலாக்கினர். மைக் டைசன் – ஜாக் பால் குத்துச்சண்டைப் போட்டியை நேரலையில் காணக் கிடைக்காமற் போய்விடுமோ என்னும் கோபத்தைச் சமூக ஊடகத்தில் வெளிப்படுத்தினர்.
மைக் டைசன், உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர். தன்னுடைய இருபதாவது வயதில் உலக ஹெவிவெய்ட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்று உலகிலேயே இளம் ஹெவிவெய்ட் சாம்பியன் என்னும் புகழைப் பெற்றவர். அந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல, போட்டியாளரை இரண்டாம் சுற்றில் நாக் அவுட் செய்த இமாலய வெற்றி. ஆண்டு 1986இல் தொடங்கிய மைக் டைசனின் வெற்றிப்பயணம் 2004 வரையில் தொடர்ந்தது. 58 போட்டிகளில் 50 வெற்றிகள். அந்த 50 வெற்றிகளில் 44 நாக்அவுட் வெற்றிகள் என்னும் கணக்கில் டைசனின் வெற்றிப்பாதை அமைந்தது. ஆண்டு 2011இல் குத்துச்சண்டை வீரர்களைப் பெருமைப்படுத்தும் ‘ஹால் ஆஃப் ஃபேம்’மில் டைசன் சேர்க்கப்பட்டார். ஆண்டு 2013இல் லாஸ்வெகாசில் கொண்டாடப்பட்டார்.
ஜாக் பால், ஆண்டு 2020இல் தொழில் முறைக் குத்துச்சண்டைப் போட்டிகளில் கலந்துகொண்டார். நான்கு ஆண்டுகளில் 11 போட்டிகளில் பங்கேற்று அதில் 10 போட்டிகளில் வென்றார். அந்தப் பத்தில் 7 வெற்றிகள் நாக்அவுட் வெற்றிகள். 2021ம் ஆண்டு ‘மோஸ்ட் வேல்யுபிள் புரொமோஷன்’ என்னும் குத்துச்சண்டை ‘ஈவென்ட் மெனெஜ்மென்ட்’ குழுவைத் தன் ஆலோசகருடன் கூட்டாகச் சேர்ந்து தொடங்கினார்.
Add Comment