6. குதிரை வண்டி எதற்கு?
கொல்கத்தாவில் கோகலேவுடன் தங்கியிருந்த காந்தி எந்நேரமும் தன்னுடைய அரசியல் குருநாதரைப் பார்த்து வியந்துகொண்டும் பாடம் கற்றுக்கொண்டும் இருக்கவில்லை. அங்கு அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. உள்ளூரிலும் வெளியூரிலும் பலரைச் சந்தித்துப் பேசவும் தன்னுடைய குழப்பங்களுக்குத் தெளிவு பெறவும் தன் போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
இதைப்பற்றியெல்லாம் காந்தி கோகலேவுடன் விவாதித்தார், அவருடைய கருத்துகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார். ஆனால், தான் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை அவர்தான் தீர்மானித்தார். அதில் கோகலே குறுக்கிடவும் இல்லை.
இந்தக் காலக்கட்டத்தில் காந்திக்கும் கோகலேவுக்கும் இடையில் சில சிறு கருத்து வேறுபாடுகளும் வந்தன. அவற்றில் ஒன்று, கோகலே குதிரை வண்டியில் பயணம் செய்வதைப்பற்றியது.
வெளிநாட்டில் படித்தவரான காந்திக்கு இளமைப் பருவத்தில் சில ஆடம்பரச் செலவுப் பழக்கங்கள் இருந்தது உண்மைதான். கப்பலில், ரயில் வண்டியில் முதல் வகுப்பில் இடம் கிடைக்காவிட்டால் அந்தப் பயணத்தையே ரத்து செய்துவிடுவேன் என்றுகூட அவர் பிடிவாதம் பிடித்தது உண்டு.
Add Comment