பகுதி 2: முதல் நாள் பள்ளி
24. ஆன்மிகத் துணைவர்
பம்பாய் அல்லது மும்பை என்றவுடன் நமக்கு முதன்முதலாக நினைவுக்கு வருகிற காட்சி, Gateway of India எனப்படுகிற மிகப் பெரிய, அழகான ‘இந்திய நுழைவாயில்’தான்.
இதற்கு ‘நுழைவாயில்’ என்பது இடுகுறிப் பெயர் இல்லை, காரணப் பெயர். இன்றைக்குப் பேருந்திலோ காரிலோ விமானத்திலோ மும்பைக்கு வருகிற சுற்றுலாப் பயணிகள் இந்த வரலாற்றுச் சின்னத்தைத் தனியாகச் சென்று பார்க்கவேண்டியுள்ளது. ஆனால், கடல்வழிப் போக்குவரத்து பெருமளவு பயன்பாட்டில் இருந்த அன்றைய நாட்களில் இந்த நுழைவாயில்தான் மும்பை வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறவர்கள் பார்க்கிற முதல் இந்தியக் காட்சியாகவும் இருந்திருக்கிறது. பெரிய அலுவலர்கள், தலைவர்களை இந்த நுழைவாயிலின் வழியாக அழைத்துவருவதைப் பெருமையாகவும் கருதியிருக்கிறார்கள்.
1911ல் இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜைப் பெருமைப்படுத்தும்வகையில் இந்த நுழைவாயிலை அமைக்கத் திட்டமிட்டார்கள். ஆனால், அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி மும்முரம் பெற்ற நிலையில் முதலாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. அதன்பிறகு, வேறு சில தடைகள். ஒருவழியாக இதைக் கட்டிமுடிப்பதற்கு 1924 ஆகிவிட்டது.
அதனால், 1915ல் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து லண்டன் வழியாக இந்தியா திரும்பி மும்பையில் கரையிறங்கியபோது இந்த இந்திய நுழைவாயில் அங்கு இல்லை. ஆனால், அவர் வந்திறங்கிய ‘அப்போலோ பந்தர்’ என்ற இடத்தில்தான் இந்திய நுழைவாயில் கட்டப்பட்டது.
Add Comment