26. பதினைந்தணா சேவை
ஜனவரி 10ம் தேதி காலை, காந்தி பஜார் கேட் என்ற இடத்துக்குச் சென்று தன்னுடைய உறவினர்கள் சிலரைச் சந்தித்தார்.
பஜார் கேட் பகுதியில் குஜராத்திகள் பெருமளவில் வசித்துவந்தார்கள். தென்னாப்பிரிக்காவில் வெற்றி பெற்றுத் திரும்புகிற தங்களுடைய மண்ணின் மைந்தரை அவர்கள் மிகவும் பெருமையுடன் வரவேற்றார்கள். வீடுகள், கட்டடங்களெல்லாம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
காந்தியைப் பார்ப்பதற்கு மக்கள் பெருந்திரளாக வந்திருந்தார்கள், அவரை மலர் தூவி வரவேற்றுப் பாராட்டினார்கள். அங்கிருந்த எல்லார் முகங்களிலும் பெருமிதம், மகிழ்ச்சி.
பல ஆண்டுகளுக்குமுன்னால், இதே மும்பையில்தான் காந்தி வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது, அவரைச் சாதியிலிருந்து விலக்கிவிடுவதாக மிரட்டினார்கள், அவருக்கு யாராவது உதவினால் அவர்களுக்கும் இதே நிலைமைதான் என்று அச்சுறுத்தினார்கள். இத்தனைத் தடங்கல்களையும் மீறித்தான் காந்தி இங்கிலாந்துக்குச் சென்றார், வழக்கறிஞரானார். அதன்பிறகும் அவருடைய சாதியினர் அவரை மனமுவந்து தங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவில்லை.
Add Comment