27. தலைவர்ன்னா பாராட்டுவோம்
ஜனவரி 12 அன்று காலை, இந்தியப் பிதாமகர் (The Grand Old Man of India) என்று பெருமையுடன் அழைக்கப்படும் தாதாபாய் நௌரோஜியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் காந்தி.
அப்போது தாதாபாய் நௌரோஜிக்கு வயது 90. தன்னுடைய அரசியல் பணியாலும் எழுத்துகளாலும் உலக அளவில் இந்தியாவின் முகமாக அறியப்பட்டிருந்த தலைவர், இந்தியாவின் தேவைகளைப்பற்றி உரக்கக் குரல் கொடுத்த தூதுவர் என்றமுறையில் அவருடைய வாழ்க்கை காந்திக்கு மிகுந்த ஊக்கமளித்தது.
அன்று மாலை, காந்திக்கும் கஸ்தூரிபா-வுக்கும் மிகப் பெரிய வரவேற்பு விழா ஒன்று நடைபெற்றது. ஃபெரோஸ்ஷா மேத்தா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். நீதியரசர்கள், ஐரோப்பிய அலுவலர்கள், புகழ் பெற்ற தலைவர்கள் என்று மும்பையின் முதன்மையான ஆளுமைகள் எல்லாரும் அங்கு கூடியிருந்தார்கள். இப்படியொரு நிகழ்ச்சியை மும்பை நகரம் இதற்குமுன் பார்த்திருக்குமா என்கிற அளவுக்கு மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அரண்மனை போன்ற அந்தச் சூழலில், மிக ஆடம்பரமான ஆடைகளை அணிந்திருந்த பெரும்புள்ளிகளுக்கு நடுவில், வேட்டியும் சட்டையும் அணிந்த காந்தி தன்னை முழு நாட்டுப்புறத்தானைப்போல் உணர்ந்தார். அந்த மாளிகையின் பளபளப்பு அவரைத் திக்குமுக்காடச் செய்தது. இந்தச் சூழ்நிலையில் இவர்களுக்கு நடுவில் தான் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் தடுமாறினார்.
Add Comment