30. உடை அரசியல்
காந்தி இளவயதில் தொப்பி, மேலங்கி, கழுத்தில் டை, இரட்டைவடத் தங்கச் சங்கிலியில் இணைக்கப்பட்ட கடிகாரம் என்று மேல்நாட்டுப் பாணியில் விதவிதமாக உடுத்தியவர்தான், அதுதான் நாகரிகம் என்று நினைத்தவர்தான். ஆனால், ஒரு கட்டத்தில் இவையெல்லாம் அவருக்கு அலுத்துவிட்டன. சுற்றியிருக்கிற மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்துத் தானும் அதேபோல் செய்வதுதான் பெருமை என்று எண்ணுவதைவிட, தான் ஓர் இந்தியர் என்பதை அடையாளப்படுத்தும்வகையில் உடுத்துவதுதான் சரி என்று நினைக்கத்தொடங்கினார்.
குறிப்பாக, நிரந்தரமாக இந்தியாவுக்கு வந்தபிறகு, காந்தி உள்ளூர் உடைகளை மட்டும்தான் விரும்பி உடுத்தினார். அவையும் எளிமையான, பகட்டில்லாத ஆடைகளாகத்தான் இருந்தன.
காந்தி இயல்பாக நினைத்துச் செய்த இந்த விஷயம் சுற்றியிருந்தவர்களுக்குப் பெரும் திகைப்பை அளித்தது. காந்திக்கான வரவேற்பு விழாக்களில் பேசியவர்களில் தொடங்கி அவரைப் பேட்டியெடுத்த நிருபர்கள்வரை எல்லாரும் காந்தியின் எளிமையான உடைப் பழக்கத்தைப்பற்றிப் பலவிதமாக வியந்தார்கள்.
ஏனெனில், நெடுங்காலம் ஆங்கிலேயர்களுடைய ஆட்சியின்கீழ் இருந்த அன்றைய இந்தியாவில் அவர்களைப் பிரதியெடுப்பதுதான் நாகரிகமாகக் கருதப்பட்டது. பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள், அலுவலர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், வெளிநாட்டில் படித்துவிட்டுத் திரும்பியவர்கள், அவ்வளவு ஏன், அப்போதைய சமஸ்தானங்களை ஆண்ட அரசர்களேகூட ஆங்கிலேயர்களைப்போல் உடுத்தத்தான் விரும்பினார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்களுக்கும்கூட இந்தப் பழக்கமோ நம்பிக்கையோ இருந்தது.
Add Comment