31. வீரம்காம் விவகாரம்
அவர் பெயர் மோதிலால். குஜராத்தில் வத்வான் என்ற ஊரைச் சேர்ந்த தையல்காரர், சமூகச் செயற்பாட்டாளர்.
மோதிலால் தன்னுடைய தொழிலில் மிகவும் திறமையானவர். ஆனால், அதை வைத்து ஏராளமாகச் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஆசையெல்லாம் அவருக்கு இல்லை. அவருடைய தேவை, மாதத்துக்குப் பதினைந்து ரூபாய்தான். அதைச் சம்பாதிப்பதற்கு அவர் நாள்தோறும் ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதும்.
அதனால், மோதிலால் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம்தான் வேலை செய்தார். மீதியுள்ள நேரத்தையெல்லாம் பொதுப்பணிகளுக்காகச் செலவிட்டார், அந்த ஊரிலுள்ள எல்லாரையும் வழிநடத்தினார். பள்ளிக்குச் சென்று படித்தவர்களெல்லாம்கூட இந்தத் தையல்காரரைப் பின்பற்றி நடந்தார்கள்.
காந்தி இந்தியாவுக்கு வந்திருக்கிறார், வத்வான் வழியாக ராஜ்கோட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறார் என்கிற தகவல் மோதிலாலுக்குத் தெரியவந்தது. உடனடியாக, அவர் வத்வான் ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டு வந்தார், காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார், ‘வீரம்காம் சுங்க வரியால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதை நீக்குவதற்கு நீங்கள் ஏதாவது செய்யவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
Add Comment