32. புனிதப் பயணம்
1915 ஃபிப்ரவரி 1ம் தேதி காந்தி அகமதாபாத் வந்தார். இன்றைய குஜராத் மாநிலத்தின் தலைநகரமாகிய இந்த ஊரைத் தன்னுடைய இந்தியப் பணி மையமாக, தன் செயல்பாடுகளின் தலைமையகமாக ஆக்கிக்கொள்ளலாமா என்று அவர் மனத்தில் ஒரு யோசனை இருந்தது. ஆனால், அது இன்னும் ஆழமாக வலுப்பெற்றிருக்கவில்லை.
அகமதாபாத் மக்கள் காந்தியை வரவேற்றுக் காரில் உட்காரவைத்தார்கள், ‘நாங்கள் இந்தக் காரை ஊர்வலமாக இழுத்துச்செல்லப்போகிறோம்’ என்றார்கள்.
மோட்டார் வைத்த கார் தானாக ஓடும். அதை ஏன் ஊர்வலமாக இழுத்துச்செல்லவேண்டும்? காந்தி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, ‘பரவாயில்லை, நான் நடந்தே வருகிறேன்’ என்று காரிலிருந்து இறங்கி நடக்கலானார். பதறிப்போன மக்கள் காரை இழுக்கும் திட்டத்தைக் கைவிட்டார்கள்.
அன்று இரவு மங்கள்தாஸ் கிர்தர்தாஸ் என்ற தொழிலதிபருடைய வீட்டில் தங்கினார் காந்தி. அடுத்த இரு நாட்களில் வெவ்வேறு கூட்டங்கள், நகரின் முதன்மையான தலைவர்களோடு சந்திப்புகள், பல இடங்களைச் சென்றுபார்த்தல், காந்தியின் வருங்காலத் திட்டங்களைப்பற்றிய உரையாடல்கள். அகமதாபாதின் பெரும்புள்ளிகள் காந்தியைப் புரிந்துகொள்வதற்கும், தன்னுடைய முயற்சிகளுக்கு இந்த ஊர் ஏற்றதாக இருக்குமா, அதற்குத் தேவையான பொருளாதார, சமூக ஆதரவு கிடைக்குமா என்று காந்தி எடைபோடுவதற்கும் இது மிகவும் வசதியாக இருந்தது.
Add Comment