40. நமக்கு நாமே
அவர் பெயர் தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர். எல்லாரும் அவரைக் ‘காகாசாகிப்’ என்று அழைத்தார்கள்.
வடமொழியில் ‘காகா’ என்றால் தந்தையின் தம்பி, அதாவது சிற்றப்பா. சிறந்த கல்வியாளரும் இதழாளருமான காலேல்கரை அனைவரும் ‘சிற்றப்பா’ என்று அழைத்தது ஏன்?
காலேல்கர் பரோடாவில் கங்காநாதர் வித்யாலயம் என்ற பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்தப் பள்ளியை நடத்தியவர், காந்தியின் நெருங்கிய நண்பரான கேசவராவ் தேஷ்பாண்டே.
இந்தக் கேசவராவ் தன்னுடைய பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் அவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஒரு குடும்பத்தில் உள்ளதைப்போன்ற அன்புப் பிணைப்பு இருக்கவேண்டும் என்று விரும்பினார். அதற்காக, அங்கு வேலை செய்த எல்லா ஆசிரியர்களுக்கும் அப்பா, மாமா, அண்ணா என்று தனித்தனி உறவுமுறைப் பெயர்களைச் சூட்டினார் அவர்.
இதனால், மாணவர்கள் ஆசிரியர்களை ‘ஐயா’, ‘சார்’ என்றெல்லாம் அழைக்கக்கூடாது, தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை அழைப்பதுபோல் அப்பா, மாமா, அண்ணா என்றுதான் அன்போடு அழைக்கவேண்டும். இதன்மூலம் பள்ளியில் இனிமையான நல்ல சூழல் நிலவும், கல்வித்தரம் மேம்படும் என்று கேசவராவ் நினைத்தார்.
Add Comment