பகுதி 3: காலாண்டுத் தேர்வு
43. கடவுளுக்குமட்டும் அஞ்சுங்கள்
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியபின் ஓராண்டுக்கு இந்திய அரசியலைப்பற்றிப் பேசுவதில்லை என்று கோகலேவுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியைக் காந்தி மிகவும் அக்கறையுடன் பின்பற்றினார். ஆனால், அவரே விரும்பி அதிலிருந்து விலகிச்சென்ற சில நிகழ்வுகள் உண்டு. அவற்றில் ஒன்று, 1915 மார்ச் 31 அன்று கொல்கத்தாவில் பெரும் எண்ணிக்கையிலான வங்காள மாணவர்களுக்கு நடுவில் அவர் ஆற்றிய உரை.
நெடுங்காலமாகப் பிரிட்டிஷ்காரர்களிடம் அடிமைப்பட்டிருக்கிற இந்தியாவின் அடுத்த தலைமுறை இதுபற்றிய காந்தியின் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறது. தாங்களும் விடுதலைப் போராட்டத்தில் இறங்கவேண்டுமா, ஆம், எனில், அதற்கு ஏற்ற வழி எது, தாங்கள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை எவை, அதன்மூலம் நாட்டுக்கு என்ன பலன் கிடைக்கும் என்றெல்லாம் அவர்களுக்குள் பல கேள்விகள் இருக்கின்றன. அவர்களையெல்லாம் காந்தி நேரடியாக வழிநடத்துவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும். அதுவரை அவர்கள் இதைப்பற்றிச் சிந்திப்பதற்கு, தெளிவுபெறுவதற்கு ஏற்ற சிந்தனை முறை ஒன்றையாவது வழங்குவது தன்னுடைய கடமை என்று அவர் நினைத்திருக்கவேண்டும்.
குறிப்பாக, அப்போதைய இளைஞர்களில் பலர் வன்முறை வழிகளால் ஈர்க்கப்பட்டிருந்தார்கள் என்கிற உண்மை காந்தியின் மனத்தை உறுத்திக்கொண்டிருந்தது. ‘துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டு என்று ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும், அடக்குமுறை செய்யும் அரசுக்கு எதிராகக் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது தவறில்லை, உண்மையில் அது ஒரு தேசத் தொண்டு’ என்பதுபோன்ற எண்ணங்கள் இந்த வயதில் அவர்களுடைய மனத்தில் பதிந்துவிட்டால், பின்னர் அமைதியான, பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள், முன்னேற்றங்களுக்குத் தகுதிபெறுதல் போன்றவற்றின் வழிக்கு அவர்களை அழைத்துவருவது கடினம், அல்லது, அதற்கான வாய்ப்பே கிடைக்காமலும் போய்விடலாம் என்று அவர் நினைத்தார். அதனால், இதைப்பற்றிய தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாகவும் உறுதியாகவும் முன்வைத்தார் அவர்.
Add Comment