44. சேவை செய்ய நேரமில்லை
1915 மார்ச் மாதத்தில் காந்திக்கு இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஒரு தந்தி வந்தது. அதை அனுப்பியவர், இருதய நாத் குன்ஜ்ரு என்ற இளைஞர்.
பின்னாட்களில் விடுதலைப் போராட்ட வீரராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றிய குன்ஜ்ரு அப்போது ஹரித்வார் கும்பமேளாவில் சேவை புரிவதற்காக வந்திருந்தார். அவருடைய தலைமையில் இன்னும் பல இந்திய ஊழியர் சங்க உறுப்பினர்களும் ஹரித்வாருக்கு வந்திருந்தார்கள். அவர்களுடன், காந்திக்கு முன்பே அறிமுகமான டாக்டர் தேவும் வந்திருந்தார்.
‘கும்பமேளா’ எனப்படும் கும்பத் திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிற மிகப் பெரிய கொண்டாட்டம். இந்த விழாவின்போது நாடுமுழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடுவார்கள், ஆற்றில் புனித நீராடுவார்கள், மதப் பெரியோர்களின் உரைகளைக் கேட்பார்கள். இவர்களுடைய தேவைகளை நிறைவுசெய்வதற்கென அங்கு ஏகப்பட்ட கடைகள், தாற்காலிகத் தங்குமிடங்கள், உணவகங்கள், முதலுதவி, மருத்துவ மையங்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
Add Comment