46. எண்ணிக்கையும் தரமும்
இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் காந்திக்கு வரவேற்பு விழா நடத்துகிறவர்கள் ஒரு வகை என்றால், அவரைத் தனிப்பட்டமுறையில் சந்தித்து, ‘நானும் உங்கள் வழியில் நடக்க விரும்புகிறேன். என்னை உங்களுடைய மாணவர் குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று வேண்டுகிறவர்கள் இன்னொரு வகை.
இதில் முதல் வகையினர் பொழியும் பாராட்டு மழை காந்திக்கு உறுத்தலாக இருந்தாலும், அவர்களுடைய அன்பை மதித்தார். அதனால், ‘எனக்கு இதெல்லாம் வேண்டாமே’ என்பதைக்கூட அவர் சற்று இதமாகத்தான் சொன்னார்.
ஆனால், இரண்டாம் வகையினரிடம் காந்தி மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டார், அதாவது, அவர்களை உடனடிப் பரிசோதனைக்கு ஆளாக்கினார்.
ஏனெனில், காந்தி இதுவரை நடந்த, இனி நடக்கப்போகிற வழி வெளியிலிருந்து கேட்பவர்களுக்கு உவப்பாக இருக்கலாம். நாட்டின்மீதுள்ள பற்றால் இளைஞர்கள் அந்த வழியை நோக்கி ஈர்க்கப்படலாம். அது சரியான வழி என்பதில் ஐயமில்லை. ஆனால், அதைப் பின்பற்றுவது மிகவும் கடினமானது என்பதை அவர்கள் அறியவேண்டும், அதில் நடப்பதற்கான மன உறுதி தங்களுக்கு இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டுதான் அவர்கள் அந்த வழியில் நுழையவேண்டும் என்று காந்தி விரும்பினார்.
Add Comment