48. நடேசன் எங்கே?
ஏப்ரல் 14 இரவு. காந்தி இன்றைய உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுராவிலிருந்து ரயிலேறினார். இம்முறை அவருடைய பயணம் மிக நீண்டது, சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கிற இந்தியாவின் தென்முனையை நோக்கியது.
காந்தி குஜராத்தில் பிறந்து வளர்ந்தவராக இருப்பினும், தமிழ்நாட்டையோ தமிழர்களையோ அறியாதவர் இல்லை. தென்னாப்பிரிக்காவில் அவர் பல தமிழர்களுடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார், அவர்களுடைய மன உறுதியையும் செயல்வீரத்தையும் தியாக உள்ளத்தையும் எண்ணி வியந்திருக்கிறார், தமிழ் கற்றுக்கொண்டு பேசவும் எழுதவும் முனைந்திருக்கிறார்.
இந்தியத் தமிழர்களுக்கும் காந்தி புதியவர் இல்லை. 1915ல் இந்தியாவின் புதிய தலைவராக, எதிர்கால நம்பிக்கையாக நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்வதற்குச் சுமார் 20 ஆண்டுகளுக்குமுன்பே (1896 அக்டோபர்) அவர் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார், தமிழ் மக்கள் அவரை மிகுந்த அன்போடு வரவேற்று, வாழ்த்தி, ஆதரவளித்திருக்கிறார்கள்.
அப்போது காந்திக்கு வயது 27தான். தென்னாப்பிரிக்க இந்தியர்களுடைய தலைவராகத்தான் அவர் இங்கு வந்திருந்தார், அவர்கள் சந்தித்துவரும் துன்பங்களைப்பற்றிய அவருடைய பேச்சும், அந்தத் தலைப்பில் அவர் வெளியிட்டிருந்த சிறு நூல் ஒன்றும் தமிழர்களை மிகவும் ஈர்த்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தலைவர்கள் காந்தியால் கவரப்பட்டு அவருடைய நெடுநாள் தோழர்களாக, பின்னாட்களில் அரசியல், சமூகக் களங்களில் அவருடன் இணைந்து பணியாற்றுகிறவர்களாக ஆனார்கள்.
Add Comment