49. அன்பைப் பொழிந்த சென்னை
ஏ. எஸ். ஐயங்காருக்குக் காந்தியைத்தான் நேரடி அறிமுகமில்லை. ஆனால், ஜி. ஏ. நடேசனை அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், ‘நடேசன் எங்கே?’ என்று காந்தி கேட்டவுடன், ‘அவர் முதல் வகுப்புப் பெட்டியில் காந்தியைத் தேடிக்கொண்டிருக்கிறார்’ என்று பதில் சொன்னார் அவர்.
அப்போதும், காந்தியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. ‘நான்தான்ய்யா அந்தக் காந்தி’ என்று புன்னகைக்கக்கூட இல்லை. அவர் முன்புபோலவே அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.
காந்திக்கு அருகில் நின்றிருந்த இன்னொருவர் ஏ. எஸ். ஐயங்காரின் முதுகைத் தட்டினார், ‘நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் காந்தி இவர்தான்’ என்றார்.
இதைக் கேட்ட ஏ. எஸ். ஐயங்காருக்கு முதலில் திகைப்பு, பின்னர் பெருமகிழ்ச்சி. இந்தச் செய்தியை உடனடியாக நடேசனிடம் சொல்லவேண்டும் என்று துடித்தார் அவர், ‘மிஸ்டர் நடேசன், மிஸ்டர் நடேசன்’ என்று சத்தமாகக் கத்தினார்.
Add Comment