51. பாமரரும் மற்றவரும்
காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின் தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம் வாயாரப் புகழப்பட்டிருந்தது, இந்தியாவில் அவர் தொடங்கவிருக்கும் நடவடிக்கைகளைப்பற்றிய எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு நடுவில், இந்தக் குஜராத்தியைத் தமிழ்நாடு எப்படித் தங்களுடைய தலைவராக வரவேற்றுக் கொண்டாடியது என்பதைக் குறிப்பிடும் நெகிழ்வூட்டும் நிகழ்வுகளும் ஆங்காங்கு காணப்பட்டன.
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, சுதேசமித்திரன் இதழில் பண்டிட் கே. டி. ஶ்ரீனிவாசாச்சாரியார் எழுதிய கட்டுரை. காந்தியை ‘அவதார புருஷன்’ என்று குறிப்பிட்டு எழுதிய அவர் ‘காந்தியின் முற்போக்குப் பண்புகள் பாமரர்களையும் மற்றவர்களையும் நேசிக்கின்றன’ என்றார், அதற்குச் சில எடுத்துக்காட்டுகளையும் முன்வைத்தார்.
காந்தி சென்னை சென்ட்ரலிலிருந்து வெளியேறி நடந்தபோது, ரயில் நிலையத்தில் பழம் விற்றுக்கொண்டிருந்தவர்களும் மூட்டை தூக்கும் தொழிலாளர்களும் அவரைப் பார்த்து இரண்டு கைகளையும் கூப்பி, ‘ஏழைகளுக்கு இரங்கும் மிகச் சிறந்த மனிதர் இவர்’ என்று போற்றினார்கள். அவர் நடேசன் & கோ நிறுவனத்துக்கு ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்தபோது, காலில்லாத பிச்சைக்காரர் ஒருவர் தன் கையிலிருந்த கொப்பரையைக் கீழே வைத்துவிட்டுக் கண்ணீரோடு அவரை வாழ்த்தினார். வண்டியில் பொருட்களை விற்றுக்கொண்டிருந்த முகம்மதிய முதியவர் ஒருவரும் இதேபோல் காந்தியைப் புகழ்ந்தார்.
Add Comment