52. ஒழுக்கம், உண்மை, அகிம்சை, உழைப்பு
ஏப்ரல் 20 அன்று, காந்தி சென்னையிலிருக்கும் இந்திய ஊழியர் சங்கத்திற்கு வந்தார், அங்கு உருவாக்கப்பட்டிருந்த ‘கோகலே சங்க’த்தின் (Gokhale Club) உறுப்பினர்களிடம் விரிவாகப் பேசினார்.
1914ல் உருவாக்கப்பட்ட இந்தக் ‘கோகலே சங்க’த்தில், சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு சமூகச் சிக்கல்களைப்பற்றியும் அவற்றுக்கான தீர்வுகளைப்பற்றியும் அதற்குத் தாங்கள் என்ன செய்யலாம் என்பதுபற்றியும் விவாதித்துவந்தார்கள், அனுபவமிக்க தலைவர்கள் அவர்களை வழிநடத்தினார்கள். அந்த வரிசையில்தான் காந்தியும் அவர்களிடையில் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திவந்த சமூகப் பரிசோதனைகளிலும் இளைஞர்கள் முதன்மையாக இடம்பெற்றிருந்தார்கள். அந்தப் பரிசோதனைகளை அவர் இந்தியாவிலும் தொடரவிருக்கிறார் என்பதால், கோகலே சங்கத்தினரிடம் அதைப்பற்றி நுணுக்கமாக விளக்கினார் காந்தி.
Add Comment