58. சோர்வின்றி உழையுங்கள்
காந்தி சென்னைக்கு வந்தது ஏப்ரல் மாதத்தில், அதாவது, கோடை வெப்பத்தைப்பற்றி எல்லாரும் புலம்புகிற நேரத்தில்.
ஆனால், காந்தியைச் சென்னை வெய்யில் அவ்வளவாகப் பாதிக்கவில்லை. தன்னுடைய உறவினரான நரன்தாஸ் காந்திக்கு எழுதிய கடிதத்தில், ‘இங்கு எல்லாரும் வெய்யிலைப்பற்றி ரொம்ப அலுத்துக்கொள்கிறார்கள். ஆனால், நான் அப்படி ஏதும் சிரமமாக உணரவில்லை’ என்றார் அவர்.
ஏப்ரல் 25 ஞாயிற்றுக்கிழமை. அதனால், காந்திக்கும் கஸ்தூரிபா-வுக்கும் வழக்கமாகப் பல நிகழ்ச்சிகள் காத்திருந்தன. அன்றைய சென்னையின் குறுக்குவெட்டுத் தோற்றம் என்று சொல்லும்படியாகப் பல சமூகங்களைச் சேர்ந்த அமைப்புகளும் அவர்களை வரவேற்றுப் பாராட்டி மகிழ்ந்தார்கள். தொடர்ந்து அந்தப் புகழ் மழையில் நனைந்ததால்தான் காந்திக்கு வெய்யில் தெரியவில்லையோ என்னவோ!
மண்ணடியிலிருந்த அபேத ஐக்கிய ஆனந்த சமாஜம் என்ற அமைப்பைச் சேர்ந்த பெண்கள் காந்தியையும் கஸ்தூரிபா-வையும் புதுமையாக (அல்லது, பழைமையாக) வரவேற்றார்கள். அதாவது, அவர்களுடைய கால்களைக் கழுவி, நெற்றியில் குங்குமம் இட்டு, அவர்களுடைய இடங்களில் அமரச்செய்தார்கள், பின்னர் ஒவ்வொருவராக அவர்களை விழுந்து கும்பிட்டார்கள், அவர்களுடைய நலனை விரும்பி வழிபாட்டுப் பாடல்களைப் பாடினார்கள்.
Add Comment