59. தேசத் தந்தை
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரிசையாகப் பல கூட்டங்களில் கலந்துகொண்ட காந்திக்கும் கஸ்தூரிபா-வுக்கும் திங்கட்கிழமை சிறிது ஓய்வு. அன்றைக்கு, வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான எஸ். சீனிவாச ஐயங்கார் அவர்களுக்கு விருந்தளித்தார்.
அப்போது சீனிவாச ஐயங்கார் மயிலாப்பூர் ‘லஸ்’ பகுதியிலிருந்த ‘அம்ஜத் பாக்’ என்ற வீட்டில் குடியிருந்தார். அங்குதான் இந்தத் தோட்ட விருந்து நடைபெற்றது.
விருந்து என்றாலும், அப்போது காந்தி பழங்களைத்தான் முதன்மையாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் என்பதை மறந்துவிடக்கூடாது. அதற்கேற்ப, அந்த விருந்தில் எவையெல்லாம் பரிமாறப்பட்டன என்பதைச் சீனிவாச ஐயங்காரின் மகள் எஸ். அம்புஜம்மாள் விரிவாகப் பட்டியலிட்டிருக்கிறார்:
வேகவைத்த வேர்க்கடலை, தேங்காயின் வழுக்கல், ஆப்பிள், ஆரஞ்சு முதலான பழங்கள், திராட்சை, பேரிச்சை போன்ற உலர்பழங்கள், பாதாம் முதலான பருப்பு வகைகள், நீர்மோர், இளநீர், பானகம்… இவையெல்லாம்தான் அன்றைய ‘மெனு’, காந்திக்குமட்டுமில்லை, அவரைச் சந்திக்க வந்த மற்றவர்களுக்கும்.
Add Comment