74. உண்மை, அகிம்சை, புலனடக்கம்
உண்மையும் அகிம்சையும்தான் காந்தியின் வாழ்க்கையை வழிநடத்திய முதன்மைக் கொள்கைகள். அதனால், இவை இரண்டையும் தன்னுடைய ஆசிரமத்தின் முதல் இரு வாக்குறுதிகளாக வைத்திருந்தார் அவர்.
பொய் பேசாமல் இருப்பதுமட்டும் உண்மையில்லை, பிறரை ஏமாற்றாமலும் வாழவேண்டும். அவ்வாறு ஏமாற்றுவதன்மூலம் நாட்டுக்கு ஒரு நன்மை வரும் என்றால்கூட அந்த ஏமாற்றைத் தவிர்த்துவிடவேண்டும்.
அகிம்சை என்பது எந்த உயிரையும் துன்புறுத்தாமல், கொல்லாமல் இருப்பது. இதன் பொருள், ஒருவர் தவறு செய்கிறார் என்று தெரிந்தாலும்கூட, அவர்மீது சினம் கொள்ளக்கூடாது, அவரை அடிக்கவோ கொல்லவோ எண்ணக்கூடாது, அப்படிப்பட்டவர்கள்மீதும் அன்பு செலுத்தவேண்டும்.
அப்படியானால், தவறு செய்கிறவர்களை எதிர்த்துப் போராடக்கூடாதா? யார் என்ன செய்தாலும் சரி என்று இருந்துவிடவேண்டுமா?
அரசாங்கமோ, மற்றவர்களோ, நம்முடைய சொந்தப் பெற்றோரோ தவறு செய்தாலும் நாம் அதை எதிர்க்கலாம். ஆனால், அது செயலின்மீதான எதிர்ப்பாக இருக்கவேண்டும், நபரின்மீதான எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது. தவறு செய்கிறவர்களை அன்பால்தான் திருத்தவேண்டும்.
Add Comment