92. அடையாளங்களின் சுமை
அகமதாபாதைச் சேர்ந்த நானாலால் சிமன்லால் மேத்தா என்பவர் I.C.S. (இந்தியக் குடிமையியல் சேவைத்) தேர்வில் வெற்றிபெற்றிருந்தார். உள்ளூர் நாயகரான அவரை வரவேற்கும்விதமாகப் பிரேமாபாய் அரங்கத்தில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குக் காந்தியும் அழைக்கப்பட்டிருந்தார்.
காந்தி தான் வாழ்ந்த, சேவை புரிந்த இடங்களிலெல்லாம் அரசாங்கத்துடன், அதன் அமைப்புகள், அலுவலர்களுடன் தொடர் உரையாடலில் இருந்தவர், இதன்மூலம் பொதுமக்களுக்கான உரிமைகளைக் கோரிப் பெற இயலும் என்று நம்பியவர். அதே நேரம், இந்தியர்களே நிறையப் படித்து அரசாங்கப் பொறுப்புகளில் அமர்ந்தால்தான் நாட்டின் முன்னேற்றமோ விடுதலையோ விரைவாகும் என்கிற எண்ணம் அவருக்கு இல்லை. அதனால், நானாலாலின் வெற்றியை அவர் ஒரு பெரிய சாதனையாகவும் நினைக்கவில்லை. ‘வேறொரு வேலையில் இருந்தபடியும் நானாலால் நாட்டுக்குச் சேவை புரியலாம், அதுவும் ஓர் ICS அலுவலருடைய சேவைக்கு இணையானதுதான்’ என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை.
ஆனால், அன்றைய (நவம்பர் 28) கூட்டத்தில் பேசிய எல்லாரும் நானாலாலை வாயாரப் புகழ்ந்தார்கள். இந்த மிகையான சொற்களைக் கேட்டு அவரே சற்று நெளியவேண்டிய சூழ்நிலை.
அப்போது காந்தி நானாலாலுக்கு அருகில்தான் அமர்ந்திருந்தார். தன்னுடைய உண்மையான உணர்வுகளை அவருடைய காதில் கிசுகிசுத்தார் நானாலால், ‘நம் இந்திய மக்கள் தேர்வில் வெற்றி பெறுகிறவர்களை ஏன் இப்படித் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை!’
ஒருவேளை, நானாலாலின் இடத்தில் காந்தி இருந்திருந்தால், ‘நான் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை. என்னை இப்படிப் புகழாதீர்கள்’ என்று வெளிப்படையாகப் பேசியிருப்பார். நானாலாலுக்கு அந்தத் துணிச்சல் இல்லை. அதனால், ‘இப்போது நான் இதை மறுத்துப் பேசினால் நன்றாக இருக்காது. ஆனால், நீங்கள் பேசினால் மக்கள் மதித்துக் கேட்பார்கள்’ என்று காந்தியிடம் சொன்னார் அவர்.
Add Comment