98. கடவுள் ஒருவர்தான்
ஜனவரி 3 அன்று, சூரத் மாவட்ட வழக்கறிஞர் கழகம் காந்திக்கு வரவேற்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது.
‘இதுபோன்ற கூட்டங்களில் என்னைப்பற்றிப் பேசப்படும் புகழ்மொழிகளைக் கேட்டுக் கேட்டு நான் களைத்துப்போய்விட்டேன்’ என்றார் காந்தி, ‘உங்களுக்கும் இதையெல்லாம் கேட்கக் களைப்பாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால், இப்போது நான் நீளமாக உரையாற்றப்போவதில்லை.’
காந்தி இப்படிச் சொன்னதும் கூட்டத்தினர் ‘இல்லை, இல்லை’ என்று குரல் எழுப்பினார்கள், அவரைத் தொடர்ந்து பேசச் சொன்னார்கள். அதைக் காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை, ‘நீங்கள் ஒரு மரியாதைக்கு இப்படிச் சொல்கிறீர்கள். இந்தியர்கள் பிறரிடம் அன்போடு நடந்துகொள்கிறவர்கள் என்பதன் அடையாளம்தான் இது’ என்றார்.
‘மக்களிடம் விழிப்புணர்வையும் புரிந்துகொள்ளலையும் கொண்டுவருவதற்கு என்னிடம் இருந்த ஆயுதங்கள் இவைதான்’ என்று பட்டியலிட்டார் காந்தி, ‘முதலில், நான் மக்களுடைய மொழியைக் கற்றுக்கொண்டேன். பிறகு, அன்றைய சூழலை அவர்களுடைய மொழியில் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன், அந்தச் சூழலைச் சமாளிப்பதற்கு என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேட்டேன். அதன்மூலம், அவர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு எனக்கு உதவ முன்வந்தார்கள். அதனால், நீங்கள் இந்தியாவின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்றால், மக்களுடன் பேசுங்கள், இன்றைய சூழ்நிலையைச் சமாளிக்க உதவுகின்ற கல்வியை, அறிவை அவர்களுக்கு ஊட்டுங்கள்.’
Add Comment