“எல்லோரும் மண்டியிடுங்கள். இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என யாரும் மிரட்டவில்லை. துப்பாக்கியை மேலே உயர்த்திச் சுடவுமில்லை. அரங்கிற்குள் நுழைந்தார்கள். எதுவும் பேசாமல் குறிபார்த்து மக்களைச் சுட்டார்கள். சுடும் சத்தத்தின் எதிரொலி கேட்டுக்கொண்டே இருந்தது. ஒன்றும் புரியவில்லை. நிஜமாகவே அதிர்ஷ்டம் இருந்ததால் மட்டுமே நான் வீடு திரும்பியுள்ளேன். என் மேல்சட்டை முழுதும் ரத்தம் படிந்திருந்தது.” என்று பதட்டத்துடன் விவரிக்கிறார் அனஸ்தெஸியா ரதியுவோனவா.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்தவர். கடந்த வெள்ளி இரவு (22-மார்ச்-2024) புறநகரிலிருக்கும் க்ரோகுஸ் சிட்டி ஹால் எனும் இசையரங்கத்தில், ஆறாயிரம் ரஷ்யர்கள் கூடியிருந்தனர். இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன், ராணுவத்தின் பச்சைச் சீருடையில் நான்குபேர் வளாகத்தினுள் நுழைந்தனர். கண்மண் தெரியாமல் சுட்டுக்கொண்டே அரங்க மேடைக்கு முன்னேறுகிறார்கள். குண்டுச்சத்தம் கேட்கவும், பயத்தில் அலறியபடியே மக்கள் இருக்கைகளின் பின்னால், ஒலிபெருக்கியின் பின்னால் எனக் கிடைத்த இடத்தில் ஒளிந்து கொள்கிறார்கள். மேடைக்கு வெகு தூரத்தில் இப்படி ஒளிந்து கொண்டிருந்த ஒருவர் எடுத்த வீடியோப்பதிவு தான், இந்தச் சம்பவத்திற்கு ஆதாரமாக முதலில் வெளிவந்தது. இருபது வருடங்களுக்குப் பிறகு ரஷ்ய மண்ணில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல் இது.
Add Comment