திமுகவின் அதிகார்பூர்வ நாளேடான முரசொலியின் முன்னாள் ஆசிரியர், முரசொலி செல்வம் (83) உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த பத்தாம் தேதி காலமானார். இவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மைத்துனருமாவார்.
நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வம் நினைவாக கருணாநிதி இவருக்குச் சூட்டிய பெயர் இது. முரசொலியில் அவர் காட்டிய ஈடுபாடு காரணமாகக் காலப்போக்கில் முரசொலி என்பது மாறன் மற்றும் செல்வம் சகோதரர்களின் அடைமொழியாகிவிட்டது. கலைஞரின் மருமகன் என்பதைத் தாண்டித் தனித்துவம் பெற்றவராக விளங்கினார் முரசொலி செல்வம்.
முரசொலியில் வெளியாகும் ஒரு பக்கக் கட்டுரைகளை மாறனுக்குப் பிறகு இவர் தொடர்ந்து எழுதி வந்தார். அப்படி எழுதிய ஒரு கட்டுரையின் மூலம் அன்றைய அதிமுக அரசின் அதிருப்திக்கும் ஆளானார். திமுக சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதி பேசிய பேச்சு முரசொலியில் வெளியானது. அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பகுதியைப் பிரசுரித்தது தொடர்பாக உரிமை மீறல் பிரச்சனை எழுப்பப்பட்டது. நீக்கப்பட்ட பகுதிகள் எதுவென்று தெரியாத நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என்று செல்வம் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து அன்றைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இவரைக் கைது செய்ய உத்தரவிட்டார். சட்டமன்றத்தில் அவர் ஆஜராகும் நாளில் ஒரு தனிக்கூண்டு கொண்டு வரப்பட்டது. அதில் ஏற்றி விசாரிக்கப்பட்டார். தமிழக சட்டசபையில் உரிமைமீறல் பிரச்சினை தொடர்பாகக் கூண்டில் ஏற்றப்பட்ட முதல் ஆசிரியர் என்ற பெயர் பெற்றார். ஜெயலலிதா ஆட்சியில் பத்திரிகைகளுக்கு எதிரான அடக்குமுறை நிகழ்வாக இதை வர்ணித்தார் கருணாநிதி. “கூண்டைக் கண்டேன் குதூகலம் கொண்டேன்” என்றார்.
Add Comment