“நீ சொல்வது போல முப்பது வருடங்கள் உன் கணவர் இங்கு வேலை செய்ததற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை. ஆகையால் இழப்பீடு எதுவும் தருவதற்கு இல்லை” என்ற நில உடைமையாளரின் பதிலில் உடைந்து போனார் ம்யேசா. அப்போதுதான் கணவர் இறந்து ஈமச்சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இந்த எதிர்வினை அவருக்குத் துன்பத்தைத் தந்தது உண்மைதான். ஆனாலும் எதிர்பார்த்ததுதான் என்பதால் சோர்ந்துபோய் விடவில்லை. அதே பண்ணையில் தொடர்ந்து வேலை செய்து கொண்டுதான் இருந்தார்.
ஆனால், அப்படிச் சொன்னதுடன் நில உடைமையாளர் நிறுத்தி விடவில்லை. அவரையும் அவர் குடும்பத்தையும் பண்ணையை விட்டு வெளியேறுமாறு மிரட்டத்தொடங்கினார். அவரது கால்நடை மந்தைகளைக் கைப்பற்றியதுடன் அவரது வீட்டுத் தோட்டத்துக்குப் போகவிடாமலும் தடுத்தார்.
வேறு வழியின்றி விவசாயம், நிலச் சீர்த்திருத்தம் மற்றும் கிராமிய வளர்ச்சித் துறை அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்றார் ம்யேசா. அப்போதுதான், அவர் வசிக்கும் நிலத்தின் உரிமை தொடர்பாக ஏற்கனவே ம்யேசாவின் தந்தை அளித்த புகார் இன்னும் நிலுவையில் இருப்பது தெரிந்தது. நில உரிமைக்காலப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, நிலத்தின் தற்போதைய உரிமையாளருக்கு, ம்யேசாவை அங்கிருந்து அகற்ற எவ்வித அதிகாரமும் இல்லை என்பதும் அறிவுறுத்தப்பட்டது.
Add Comment