பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடைகள் அடைக்கப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் அடக்கம் செய்வது தொடர்பாக நீதிமன்றம் வரைக்கும் சென்றனர். நெரிசலான பகுதியில் அடக்கம் செய்தால் எதிர்காலத்தில் அஞ்சலி செலுத்த வரும் மக்கள் எண்ணிக்கையால் விபத்து நடக்கலாம். இதைக் காரணம் காட்டி கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மறுத்து அரசு வேறு இடத்தில் நிலம் கொடுக்க முன்வந்தது. புறநகர்ப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் அடக்கம் செய்து நினைவிடத்தை அவர் வாழ்ந்த பகுதியில் கட்டிக் கொள்ளலாம் என்று குடுபத்தினர் முடிவெடுத்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனை, நீதிமன்றம் என ஆங்காங்கே சிறிய அளவில் மறியல்கள் நடந்தாலும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக இறுதிச் சடங்குகள் நடந்தன.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை, அதுவும் காவல் நிலையத்தில் இருந்து நூறடி தூர இடைவெளியில் வெட்டிக் கொலை செய்துவிட முடிகிறது. அரசியல் கொலை அல்ல, அரசியல்வாதியின் கொலை என்று வியாக்கியானம் பேசுவதால் இதில் அரசுக்குப் பொறுப்பில்லாமல் போகாது.
ஆற்காடு சுரேஷ், அவருடைய கூட்டாளி மாதவன் இருவரின் கொலைகள் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. அடுத்தடுத்து சில மாத இடைவெளிகளில் கொலைகள் நடந்த போது அது தொடரக்கூடும் என்பதைக் கூடவா காவல்துறை அறிந்து வைத்திருக்கவில்லை? நெரிசல் மிகுந்த இப்பகுதியில் உள்ளே வந்து கொலை செய்துவிட்டுத் தப்பித்துச் செல்ல வேண்டுமெனில் பல நாள் திட்டமிட்டிருக்க வேண்டும். காவல் நிலையத்தைச் சுற்றி சுற்றி வந்து திட்டம் போடும் வரைக்கும் உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது? தலைநகர் சென்னையிலேயே அடிக்கடி கொலை, வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தால் மற்ற இடங்களின் நிலைமை என்ன?
True words