உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே
இது திருமூலர் சொன்னது.
காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக
நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே
இது அப்பர் அடிகள் சொன்னது.
நட்ட கல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
இது சிவவாக்கியர் சொன்னது.
இப்படி இறைவனை எங்கே தேட வேண்டுமென்று தெளிவாகச் சொன்ன திருமூலரை விடவும் அப்பரை விடவும் சிவ வாக்கியரை விடவும் பெரிய பெரிய ஆன்மிகவாதிகளும் மகான்களும் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நம்ப முடியவில்லை.
தமிழையும் தமிழ் மகான்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்; எங்களுக்கு வேதங்களும் உபநிடதங்களும்தான் ஈசனின் நேரடி வாக்கு என்று சொல்பவர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களுக்கு, ‘தத்வமஸி (நீ அதுவாக – கடவுளாக இருக்கிறாய்) அஹம் ப்ரம்மாஸ்மி (நான் கடவுளாக இருக்கிறேன்)’ என்கிற உபநிடத வாக்கியங்களைச் சுட்டிக் காட்டுகிறோம்.
நீயும் கடவுள், நானும் கடவுள் என்றான பிறகு, பேதங்கள் எங்கிருந்து வருகின்றன? அதுவும் பக்தர்கள் தங்களுக்குள் பேதம் பாராட்டலாமா? பக்தர்களுக்குள் இந்துவென்ன, முஸ்லிமென்ன, பௌத்தனென்ன, பார்சியென்ன, கிறிஸ்துவனென்ன?